அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் பிறந்த நாளையொட்டி நிம்மி சாக்கோ எழுதிய தி அப்போலோ ஸ்டோரி புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. அதில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்ட நடிகர் ராம்சரணின் மனைவியும், பிரதாப் ரெட்டியின் பேத்தியுமான உபாசனா பேசியது: இந்த புத்தகத்தை ஒவ்வொரு தந்தையும் படிக்க வேண்டும். காரணம், எனது தாத்தா தனது 4 மகள்களை எப்படி வளர்த்திருக்கிறார், அவர்களை ஆண் பிள்ளைகளை போல் சொந்த காலில் எப்படி நிற்க வைத்தார் என்பதெல்லாம் தெரிந்துகொள்ளலாம். இந்த புத்தகம் வெறும் கட்டுரைபோல் இல்லாமல், காமிக் வடிவில் இருப்பதுதான் இதன் சிறப்பு. தாத்தாவின் கதையை படமாக்கும் திட்டம் உள்ளது. கண்டிப்பாக அதை பான் இந்தியா படமாக எடுக்கலாம். அதில் எனது கணவர் ராம்சரண் நடிப்பாரா என்பதை நான் தீர்மானிக்க முடியாது. அதை படத்தின் இயக்குனர்தான் தீர்மானிப்பார். இவ்வாறு உபாசனா பேசினார். பிரதாப் ரெட்டி பேசும்போது, 1983ல் சென்னையில் அப்போலோ மருத்துவமனையை தொடங்கியதிலிருந்து எனது பயணம் தொடங்கியது எனலாம். இந்திய மருத்துவர்கள் மூலம், சர்வதேச தரத்திலான சிகிச்சை தருவதுதான் எங்களது இலக்காக இருந்தது. அதை எட்டியிருப்பது பெருமையாக உள்ளது. இது மக்களின் ஆதரவால் மட்டும் சாத்தியமானது’ என்றார்.