Mon. Oct 7th, 2024
Spread the love

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் ‘லால் சலாம்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில கலந்து கொண்ட ரஜினி காந்த் பேசியதாவது:-

”லால் என்றால் சிவப்பு. சிவப்பு நிறத்துக்கு நிறைய அடையாளங்கள் இருக்கு. அதை கம்யூனிஸ்ட் பயன்படுத்துவாங்க. வன்முறைக்கும் பயன்படுத்துவாங்க. புரட்சிக்கும் பயன்படுத்துவாங்க. ஐஸ்வர்யா புரட்சிக்காக தேர்ந்தெடுத்துருக்காங்க. கதை சொல்லும்போதே, இந்த கதைக்கு தேசிய விருது கிடைக்கும் என என் மகள் சொன்னார். அதுக்கு பிறகு விருதுக்காக நான் கேட்கமாட்டேன்னு சொல்லிட்டேன். அதன் பிறகு இது உண்மை கதை என்று சொன்னாங்க. அப்புறம் அந்த கதையை கேட்டேன். ஓகே சொன்னேன். `ரஜினிகாந்தே இந்த படத்தை தயாரிக்கலாம். அவர்கிட்ட இல்லாத பணமா?, கோடி கோடியா வச்சுருப்பார்’னு நிறைய பேர் பேசிகிட்டாங்க.’பாபா’ படத்துக்கு பிறகு நமக்கு ராசியில்லன்னு நிறுத்திட்டேன். நான் ஐஸ்வர்யாகிட்ட, நானே அந்த கதாபாத்திரம் பண்றேன்னு சொன்னேன். நம்ம வாழ்க்கையில நண்பர்கள் ரொம்ப முக்கியம். நண்பனுக்கும், எதிரிக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. எதிரி உள்ள ஒன்னு வச்சுருப்பான். அவன் பெரிய எதிரி ஆகிடுவான். ஆனா நண்பன் அப்படியில்ல, எனக்கு ஒரு நண்பர் இருக்கார். எனக்கு ‘ஜெயிலர்’ படம் ஹிட் ஆன சமயத்துல, அந்த நண்பரிடம் படம் எப்படி இருக்கு என்று கேட்டேன். 30 சதவீதம் சந்தோஷம். 70 சதவீதம் சந்தோஷம் இல்லனு சொன்னார். மூன்று முடிச்சுல இருந்து இப்போ ஜெயிலர் வரைக்கும் எந்த படம் ஹிட்டானாலும் உனக்கு நேரம் நல்லா இருக்குனுதான் சொல்வார். அதுக்கு பிறகு உனக்கு மேடையில பேசுறதுக்கு யார் இதெல்லாம் எழுதி தர்றாங்கனு கேட்டாரு.

மத நல்லிணக்கம் பத்தி இந்த படம் முக்கியமாக பேசியிருக்கு. மனுஷங்க சந்தோசமாக இருக்கனுன்னுதான் மதம் உருவாச்சு. இப்போ நான்தான் பெருசு, நீதான் பெருசுனு பேசிக்கறாங்க. எந்த மதத்துல உண்மை, நியாயம் இருக்கோ. அதுதான் சரியாக இருக்கும். சமீபத்தில் நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டார்கள். எனக்கும், விஜய்க்கும் ஏதோ போட்டி என்பது போல பேசுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நடிகர் விஜய் என் கண்ணுக்கு முன்பு வளர்ந்த பையன். சின்ன வயதிலிருந்தே அவரை பார்த்து வருகிறேன்.

‘தர்மத்தின் தலைவன்’  சூட்டிங்போது விஜய்க்கு 13, 14 வயசு இருக்கும். சூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார். சூட் முடிஞ்சதும் சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார். “என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கு. படித்த முடித்த பிறகு நடிக்கலாம் என நீங்க சொல்லுங்க” எனத் தெரிவித்தார். நான் விஜயிடம் நல்லா படிப்பா. அதன்பின் நடிகர் ஆகலாம் என்று சொன்னேன்.

அதன்பின் விஜய் நடிகராகி, படிப்படியாக அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால் தற்போது இந்த உயர்வான இடத்துல இருக்கிறார். சமூக சேவை செய்து வருகிறார். அடுத்து அரசியல்… இதுல எனக்கும் விஜய்க்கும் போட்டி என சொல்வது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது. தயவு செய்து ரெண்டு பேரின் ரசிகர்களும் எங்களை ஒப்பிட வேண்டாம். ஒப்பிடுவதை நிறுத்துங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.

நான் கூறிய காக்கா- கழுகு கதை விஜயை விமர்சித்து கூறியதாக பலர் தவறாக புரிந்து கொண்டனர். விஜயை விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது வருத்தம் ஏற்படுத்தியது. விஜய் படிப்படியாக வளர்ந்து பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார், விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை. எனக்கு நானே போட்டி. எனக்கு என் படங்களே போட்டி. அவருக்கு அவரே போட்டி. விஜயை போட்டியாக நினைப்பதோ, என்னை அவர் போட்டியாக நினைப்பதோ இருவருக்கும் கவுரவம் ஆகாது. என்றும் நான் விஜயின் நலம் விரும்பியாக இருப்பேன்”. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *