தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் போன்ற பல படங்களில் நடித்தவர் பாவனா. மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். எனினும் திருமணத்துக்குப் பிறகும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் பாவனா அளித்துள்ள பேட்டியில், “திருமணத்துக்கு பிறகு நடிகையின் இலக்கு மாறிவிடும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. திருமணத்தால் நமது திறமையும், செயல்பாடும் எந்த வகையிலும் மாற்றம் காணாது. திருமணத்திற்கு பிறகு நாம் ஏன் மாற வேண்டும்? ஏன் நமது பணிகளை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்?
நான் சினிமாவுக்கு வரும்போது எனக்கு வயது 15. அப்போது இருந்த அதே ஆர்வம், இப்போதும் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு பலர் சென்டிமென்ட்களில் சிக்கி கொள்கிறார்கள். நான் அப்படி அல்ல. எதுவாயினும் நான் நானாக இருக்கிறேன். திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். இயக்குனர்களும் அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். இதிலிருந்து மாறுபட்டு திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். என் மனநிலையில் நான் உறுதியாகவும் இருக்கிறேன். எனவே திருமணத்திற்கு பிறகு எனது செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.