கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரீத்துவர்மா நடிப்பில் உருவாகி திரையிட தயார் நிலையிலுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.. பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் கடந்த நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஒப்பந்தபடி படத்தையும் முடிக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என அந்த நிறுவனம், ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கவுதம் மேனனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பணத்தை திரும்ப கொடுத்தால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடலாம் என கடந்த நவம்பர் 22-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து பணத்தை திரும்பி செலுத்தாததால் படத்தை இதுவரை வெளியிட முடியவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டிருப்பதால் இந்த வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.