சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல்செய்த மனு: எனது நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் போட்டு ரூ.15 கோடி சம்பளம் பேசினார். 2019 மே மாதம் படம் வெளியான நிலையில், சம்பளத்துக்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா அதை வருமான வரித் துறையில் செலுத்தவில்லை.
இதனால், டிடிஎஸ் தொகை ரூ.91 லட்சத்தை வங்கிக் கணக்கில் இருந்து வருமான வரித்துறை வசூலித்தது. அதை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நிலுவையில்இருந்தபோது, சிவகார்த்திகேயனுக்கும், ஞானவேல்ராஜாவுக்கும் இடையே சுமுக தீர்வு ஏற்பட்டு, டிடிஎஸ் தொகையும் வருமான வரித்துறையில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண்டிய ரூ.12.60 லட்சத்தை வட்டியுடன் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.