நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் ‘புளூஸ்டார்’. இதில் அசோக் செல்வன், சாந்தனு, பிருத்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள், அருண் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் ஜெய்குமார் கூறியதாவது: ‘இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த, மிகவும் பிடித்த ஒரு விளையாட்டாக மாறிஇருக்கிறது. சிற்றூர் முதல் குக்கிராமங்கள் வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. அரக்கோணம் அருகிலுள்ள ஒரு சிறிய ஊரில் வசித்து வரும் இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் விளையாட்டு, காதல், நட்பு, அரசியல், கொண்டாட்டம் ஆகிய விஷயங்கள் குறித்து ஜனரஞ்சகமான முறையில் சொல்கிறேன். அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன் ஆகியோர், கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கின்றனர். இந்த படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போது விளையாடும் இளைஞர்கள் உள்பட அனைவருக்கும் நெருக்கமான உணர்வுகளை தரும் படமாக இருக்கும். வரும் 25ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது’ என்றார்.