ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அயலான் நாளை திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது. காரணம் தங்களுக்கு தர வேண்டிய ரூ.1 கோடியை வழங்காமல் படத்தை வெளியிட கூடாது என எம்.எஸ்.சேலஞ்ச் என்ற திரைப்பட விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அயலான் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.
எம்.எஸ்.சேலஞ்ச் விளம்பர நிறுவனத்திற்கு ரூ.50 லட்சத்தை பட தயாரிப்பு நிறுவனம் செலுத்தியதாலும், மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதாலும் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி நாளை அயலான் திரைப்படம் வெளியாகுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.