Mon. Oct 7th, 2024
Spread the love

மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான கதை எழுதும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், “லியோ படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதோடு ஆயுத கலாச்சாரம் காட்டப்பட்டுள்ளது. மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி, முரண்பாடான கருத்துகளை முன்வைக்கிறது. அதன் தொடர்பான எதிரிகளை பழிவாங்குவதற்கு பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும் என இளம் சிறார்களை பாதிக்கக்கூடிய காட்சிகளை லோகேஷ் கனகராஜ் படமாக்கியுள்ளார்.
மேலும் சட்ட விரோத செயல்கள், போதைப் பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், அதிகாரத்தை அச்சுறுத்துவது, காவல் துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என சமூக விரோதமான கருத்துக்களை தனது திரைப்படங்களில் காண்பித்திருக்கிறார். இது தொடர்பாக லியோ படக்குழு மீது வழக்கு பதிவு செய்து, லியோ படத்தை எந்த தளத்திலும் திரையிடாதவாறு தடை விதிக்க வேண்டும். அத்தோடு வன்முறை காட்சிகளை படமாக்கி அதை திரைப்படமாக்கியதால், அவருக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனுவானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதன் படி லோகேஷ் கனகராஜ், இந்த குற்றச்சாட்டு குறித்து லியோ படம் வன்முறை காட்சிகள் தொடர்பாக விரிவான பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *