Thu. Oct 3rd, 2024
Spread the love

அரிது அரிது மனிதராய் பிறத்தலே அரிது எனும் போது ஒருவரின் உயரம், நிறம், பருமன் போன்ற அங்க அமைப்புகள் பற்றிக் கேலி பேசுவது சரியில்லை என்பது பலருக்கு புரியபடுவதில்லை. உருவக் கேலியை வளர்த்தெடுத்ததில் கணிசமான பங்கு நம் திரைப் படங்களுக்கு உண்டு. பிறர் மனம் நோகுமே என்ற அடிப்படை நாகரீகம் சிறிதும் இல்லாமல் அவர்களை உருவ கேலி செய்து சிரிப்பது வன்முறைக்கு ஒப்பாகும் என்பதை சுட்டிக் காட்டுவதுடன், உடற்குறைபாடு கொண்டவர்கள் எதையாவது சாதித்தால் மட்டுமே கொண்டாடுகிற, அதே இயல்பான வாழ்க்கை வாழும் போது கேவலப்படுத்துகிற சமூகத்தின் மீது கோபத்தைக் கொட்டி இருக்கிறது இந்த மதிமாறன் சினிமா. வில்லேஜ் ஒன்றில் போஸ்ட்மேன் வேலை செய்பவர் சுந்தரம் (எம் எஸ் பாஸ்கர்). இவருக்கு இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர் தான் நெடுமாறன் (வெங்கட் செங்குட்டுவன்), மற்றொருவர் மதி (இவானா). நெடுமாறன் பெயருக்கு மாறாக உயரத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கிறார். இதனால், பலரும் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருவதை எதிர்த்துக் கேட்டு கோப்படுவார். அதே சமயம். தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருகிறார். இவருக்கும் கல்லூரி தோழியான பிரபாவதிக்கும் (ஆராத்யா) காதல் மலர்கிறது. இந்நிலையில் ஹீரோவின் சிஸ்ட்ரான , இவானா தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி போய்விட்டார் என்ற செய்தியறிந்து வீட்டில் அனைவரும் உறைந்து போகின்றனர். இதனால் அப்செட்டான எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள். இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார் நெடுமாறன். கோபத்தோடு தனது சகோதரியை காண சென்னை பயணப்படுகிறார். அதே நேரம், சென்னையில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் கற்பழித்து கொல்லப்படுகின்றனர். இத்தினை சூழலில் தன் சகோதரியை கண்டு பிடித்தாரா? அங்கு நடக்கும் கொலைகளுக்கு யார் காரணம் ? நெடுமாறன் செய்ய இருப்பது என்ன? போன்ற கேள்விகளுடன் நகர்கிறது மதிமாறன் படத்தின் கதை. நிஜமாகவே உயரம் குறைவாக உள்ள வெங்கட் செங்குட்டுவன், குட்டையன் கேரக்டருக்கு ஃபர்பெக்டாக செட் ஆகிறார். உருவ கேலிக்கு ஆளாகும்போதெல்லாம் ஆவேசமாவது, அப்பா அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகும்போது கதறித் துடிப்பது, மதி நிறைந்த மாறனாகி நடக்கும் கொலைகளுக்கான காரணத்தை துப்பறிந்து கண்டுபிடிப்பது, காவல்துறைக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்துவது என சுற்றிச் சுழன்றிருக்கிறார். அப்படி அவர் செய்யும் விஷயங்களில் லாஜிக், நம்பகத்தன்மை எல்லாம் இல்லை என்றாலும் ஒரு அனுபவ நடிகர் என்ன நடிப்பைக் கொடுப்பாரோ அந்த நடிப்பைக் கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். ’லவ் டுடே’ போன்ற ஒரு படத்தின் மூலம் இளசுகளை கவர்ந்த இவானா, இப்படி ஒரு வேடத்தில் நடித்தது ஆச்சரியம் தான். இளம் நடிகைகள் நிராகரிக்கும் ஒரு வேடத்தில் நடித்த அவரது தைரியத்தை பாராட்டினாலும், அவருடைய கதாபாத்திரத்திற்கு முதல் பாதியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதால் அவரும் அவருடைய நடிப்பும் மனதில் நிற்கவில்லை. வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரி தோழியாகவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கும் ஆராத்யா அழகிலும், அளவான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். இவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார். அடுத்து வெங்கட் செங்குட்டுவனின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார்.இ என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். பர்வேஸின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. உருவ வளர்ச்சி குறைபாடுள்ள ஒருவரின் மனநிலையை வைத்து கதை எழுதி இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன், தான் சொல்ல வந்ததை உறுதிப்படுத்த மர்ம கொலைகள், கற்பழிப்புகள், அதை நாயகனே கண்டுபிடிப்பது என்று கொண்டு போயிருப்பது கொஞ்சம் ஓவர் ஆனதால் பெரிய அளாவில் படம் ஈர்க்கப்படவில்லை.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *