உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் முடிந்து திங்கள்கிழமை (டிச.11) வீடு திரும்பினாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மியாட் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (டிச.26) மாலை அனுமதிக்கப்பட்டார். இன்று வியாழக்கிழமை (டிச.28) வீடு திரும்புவாா் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கமான பரிசோதனையின் முடிவில் விஜயகாந்துக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம்(வெண்லேட்டர்) சிகிச்சை கொடுக்கப்படுவதாக தேமுதிக தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. விஜயகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், செயற்கை சுவாசம்(வெண்லேட்டர்) சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உயிரிழந்த தகவலை அடுத்து மருத்துவமனை அலுவலகம் முன்பு குவிந்திருந்த தொண்டர்கள் கேப்டன் என கதறி அழுதனர். உயிரிழந்த விஜயகாந்தின் உடல் அவருடைய சாலிகிராமம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. விஜயகாந்த் மறைவை அடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.