இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட்டார வழக்கு’. மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடக்ஷன்ஸ் கே.கந்தசாமி மற்றும் கே. கணேசன் வழங்கும் இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு மூடர் கூடம் டோனி ஷார்ட், சுரேஷ் மண்ணியன் ஒளிப்பதிவு மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை வெங்கட்ராஜன் செய்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 29- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் காதல் வசனங்கள் இல்லாமல், காதலர்கள் நேரிலும் சந்திக்காமல் மலர்ந்த புதுவிதமான காதல் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், தமிழ் சினிமா காணாத காதல் காட்சிகளை கொண்டு இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகை ரவீனா ரவி பேசியதாவது, “2019-ல் நடித்தப் படம் இது. ராமச்சந்திரன் சார் நினைத்தது போல படம் வந்திருக்கிறது என நம்புகிறேன். நல்ல கதை இது. வருகிற 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மீடியா நல்ல விமர்சனம் கொடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படப்பிடிப்பு நடத்திய ஊரில் உள்ள கிராமத்து மக்களும் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தனர். எல்லோரும் ரிஸ்க் எடுத்து தான் நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார். இப்படத்தின் கதாநாயகன், நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் பேசியதாவது, “இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி அவர் பெயரை சொல்வதற்கு கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. அவரது இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது. இயக்குனர், ரவீனா உள்பட படக்குழுவினர் அனைவருமே சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். இப்போது எல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம் உள்ளது, தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.