தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தனது தாய்மாமா சரவணன் வீட்டிற்கு வருகிறார் விதார்த். ஆனால் அவரது மாமா எந்த வேலைக்கும் போகாமல் அரசாங்கம் கொடுக்கும் இலவச பொருட்களை வைத்து பிழப்பு நடத்துபவராகவும், மேற்கொண்டு தேவைப்பட்டால் அடுத்தவர் வீட்டுப் பொருட்களைத் திருடி வாழ்க்கையை ஓட்டுபவராகவும் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவர்தான் இப்படி என்றால், விதார்த் இவருக்கும் ஒரு படி மேல் சென்று, மாமனை மிரட்டி சாப்பிட நினைக்கிறார், அதே நேரம் ஒவ்வொருவர் வீட்டிலும் கழிவறை கட்ட வேண்டும் என ஊர் தலைவர் சொல்கிறார். ஆனால், சரவணன் கழிவறை கட்டாமலேயே கட்டியதாகச் சொல்லி பணத்தை ஏமாற்றி வாங்கிவிடுகிறார். அதைத் தெரிந்து கொண்ட ஊர் தலைவர் கழிவறையை கட்டியே ஆக வேண்டும் என சரவணனிடம் கறாராகச் சொல்லிவிடுகிறார். கழிவறை கட்ட சரவணன், விதார்த் இருவரும் வீட்டின் அருகில் பள்ளம் தோண்டிய போது சோழர் காலத்து ஆயிரம் பொற்காசுகள் புதையலாகக் கிடைக்கிறது. அந்தப் புதையலை அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் மறைத்து சரவணனும், விதார்த்தும் பங்கு போட்டுக்கொள்ள நினைக்கிறார்கள். அவர்கள் மறைக்க நினைத்தும் முடியாமல் அந்த ரகசியம் ஒவ்வொருதர் மூலமாக வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை .
அந்த புதையல் ரகசியத்தைத் தெரிந்து கொண்டவர்களை சரவணன், விதார்த் எப்படி சமாளிக்கிறார்கள். அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டவர்கள் அதில் தங்களுக்கும் பங்கு கேட்டு எப்படி தொந்தரவு செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கலகலப்பு.
விதார்த் நடிப்பில் சமிபத்தில் வெளியான ‘குய்கோ‘ படத்திற்குப் பிறகு, இந்தப் படமும் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தரும். அதேபோல் ‘பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம்‘ ஆகிய படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனித்து பெயர் வாங்கிய சரவணன், இந்தப் படத்திலும் அதே கலகலப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார்.
விதார்த்தைப் பார்த்த மாத்திரத்திலேயே காதலிப்பவராக வரும் அருந்ததி நாயர், தனது எதார்த்த நடிப்பில் கிராமத்து பெண்ணாக நின்று ரசிகர்களின் மனம் கவர்கிறார். இருவரும் ஊரை விட்டு ஓட திட்டம் போட்டு அது முடியாமல் போய் திரும்பிப் போவதைக் கூட நகைச்சுவையாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஒரு படத்தில் ஓரிரு கதாபாத்திரங்களுக்குத்தான் பொதுவாக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் பல கதாபாத்திரங்களுக்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். சரவணன் வீட்டின் எதிர் வீட்டுக்காரராக ஹலோ கந்தசாமி, பள்ளம் தோண்ட வந்தவர்களான ஜார்ஜ் மரியான், பவன் ராஜ், நகையை உருக்க உதவி செய்ய வரும் வெற்றிவேல் ராஜா , ஊர் தலைவர் கர்ண ராஜா, இன்ஸ்பெக்டர் பாரதி கண்ணன், கதாநாயகியின் தோழி செம்மலர் அன்னம் என ஒவ்வொருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார்கள். கிராமத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கதாபாத்திரங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது பானுமுருகனின் கேமரா. நகைச்சுவைப் படங்களுக்குரிய இசையைக் கொடுத்திருக்கிறார் ஜோஹன். படம் முழுவதுமாக நகைச்சுவையை மட்டுமே வைத்துள்ளார்கள். உணர்வுபூர்வமாக சில அழுத்தமான காட்சிகள் எங்கும் இல்லை என்பது மட்டுட்மே சிறிய குறை.