‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார்.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ”கொம்பு சீவி படத்தின் போஸ்டரை பார்க்கும்போது எனர்ஜியாக இருக்கிறது. கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் கொம்பு சீவி என தெரியவில்லை. இரண்டு பேரும் அந்த அளவிற்கு இருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது. ‘உனக்கு நான் சளைத்தவன் இல்லடா..!’ என சரத்குமாரும் அதில் ஆக்ரோஷமாக இருக்கிறார். அவரது கெட்டப் நன்றாக இருக்கிறது.
‘வயதானாலும் நான் கொம்பு சீவின காளை டா..!’ என்பது போல் இருக்கிறது அவருடைய தோற்றம். அந்த வகையில் இந்த போஸ்டரே படத்தின் வீரத்தை காட்டுகிறது.
இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவையை விட வேகம் – ஆக்ஷன் அதிகம் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் பொன்ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவர்.
இயக்குநர் ஒரு இளைஞர், ஹீரோ ஒரு இளைஞர், சரத்குமார் ஒரு இளைஞர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா ஒரு இளைஞர். இப்படி இளைஞர்கள் புதிய வேகத்துடன் இணைந்திருக்கிறார்கள்.
உலகத்திற்கே உரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அது எல்லாத் துறையிலும் உண்டு. சமூகம்- அரசியல்- திரைத்துறை- என எல்லாத் துறையிலும் இது உண்டு. எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒரு காலத்தில் எம் கே தியாகராஜ பாகவதர்-பி யு சின்னப்பா, அதற்குப் பிறகு எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் அதற்குப் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. இது காலத்தின் கட்டாயம். ஆகவே மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த இளைஞர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் நிகழ வேண்டும், வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி,” என்றார்.
நடிகர் சண்முக பாண்டியன் பேசுகையில், ”இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். திரைத்துறையில் நீண்ட கால அனுபவமிக்க பலர் என்னுடன் நடித்தார்கள். அப்பாவின் நெருங்கிய நண்பரான சரத்குமார் சார் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியதிலிருந்து எனக்கும் அவர் நெருங்கிய நண்பராகி விட்டார். அவருடன் பழகிய நாட்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பல நடிகர்களுக்கு அவர் உதவி செய்திருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை பார்த்த பிறகு, நானும் இயக்குநர் பொன்ராமின் ரசிகனாகி விட்டேன். அவருடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அவருடன் பணியாற்ற முடியுமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் இருக்கும் நகைச்சுவை நடிப்பையும், எதிர்வினையையும் அவர்தான் வெளிக்கொண்டு வந்தார். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஒத்திகையும், பயிற்சியும் செய்தோம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை அளித்தார். காட்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கி தந்தார். குறிப்பாக நான்- சரத் சார் -கல்கி- மூவரும் லாரி தொடர்பான காட்சி ஒன்றில் நடித்தோம். அந்த காட்சியில் நாங்களாக தான் ஒரு எல்லைக்கு மேல் நிறுத்திக் கொண்டோம்.
இந்தப் படம் சீரியஸான கதை. அதை இயக்குநர் பொன்ராம் நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இதை நீங்கள் அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று ரசித்து அனுபவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், ”இந்த விழா கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழாவாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒரு உணர்வுப்பூர்வமான விழாவாக கருதுகிறேன். இந்த விழாவிற்காக இந்த மேடையில் நிற்கும் போது எனது அன்பு நண்பர் விஜயகாந்தை நினைக்காமல் இருக்க இயலாது. அவரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால் என் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடும். என்னால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.
திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் நட்பை பற்றி குறிப்பிட்டார்கள். இந்தப் படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில் கலை உலக பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் விஜயகாந்தின் ஒப்பனைக் கலைஞர் ராஜு, புலன் விசாரணை படத்திற்காக ஒரு வில்லனை தேடிக் கொண்டிருக்கும் போது சரத்குமார் வாட்ட சாட்டமாக இருக்கிறார் என என்னை விஜயகாந்த்திடம் பரிந்துரை செய்திருக்கிறார். உடனடியாக என்னை அழைத்துக் கொண்டு விஜயகாந்தின் அலுவலகத்தில் அவர் முன் நிறுத்துகிறார்கள். அவர் என்னை பார்த்தவுடன் உடனடியாக இயக்குநர் செல்வமணியையும், என்னுடைய நண்பர் ராவுத்தரையும் பார்த்து விடுங்கள் என சொன்னார். என்னை பார்த்ததும் அவர் முடிவு செய்துவிட்டார். அப்போது இயக்குநரும், விஜயகாந்த்தும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் . உடனடியாக நான் அருகில் உள்ள முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று என்னுடைய மீசையை மழித்து விட்டு அவர்கள் முன் நின்றேன். அன்று தொடங்கியது தான் இந்த கலைப் பயணம். அது மறக்க முடியாத தருணம்.
அந்தப் படம் நிறைவடைந்து வெளியான பிறகு எந்த கதாநாயகனும் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை விஜயகாந்த் என்னிடம் சொன்னார். ‘சரத் இந்த படத்தில் உங்களுக்குத் தான் மிகப்பெரிய பெயர்’ என்றார். அதைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் நடித்தேன்.
புலன்விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் போதும் சண்டை காட்சிகளில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மற்றவர்கள் மாற்று வழியை சொன்ன போதும், சரத் குணம் அடைந்து வந்த பின் அந்த காட்சியை படமாக்கிக் கொள்ளலாம் என்று விஜயகாந்த் உறுதியாக சொல்லி விட்டார். அவருடைய உறுதி தான் என்னை மிகவும் கவர்ந்தது இன்று வரை அவருடைய என்னை பிணைத்து வைத்திருப்பதும் அவருடைய அந்த குணம் தான். அவருடைய திறமை, அன்பு, பாசம் ஆகிய அனைத்தையும் அவருக்கு அருகே இருந்து அனுபவித்தவன் நான்.
இன்று இந்த மேடையில் இருந்து ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன். சண்முக பாண்டியன் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராவார். அதில் எந்த மாற்றமும் இல்லை. கேப்டன் விஜயகாந்த் எப்படி இருப்பாரோ அதேபோல் இவரும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.
இந்தப் படத்தில் மாமன்- மச்சினனாக நாங்கள் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த குடும்ப ரீதியிலான உறவு தொடர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
சண்முக பாண்டியனுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் உயரத்தை பற்றி தவறாக நினைக்காமல் உங்கள் உயரத்திற்கு ஏற்ற பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நீங்கள் ‘தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன்’. அதனால் கழுத்தை குனிந்து மற்றவர்களிடம் கேட்காமல் நிமிர்ந்து கதையைக் கேட்டு பணியாற்ற வேண்டும்.
இந்த ‘கொம்பு சீவி’ படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.
ஒரு திரைப்படம் வெளியாகி 30 நாட்களில் டிஜிட்டல் தளத்தில் வந்துவிடும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல், இந்த படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும். அதே தருணத்தில் டிஜிட்டல் தளங்களுக்கும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். நீங்கள் ஒரு திரைப்படத்திற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுப்பதை, 50 நாளாக உயர்த்தினால் நன்றாக இருக்கும். மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசிப்பார்கள். ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்பதில் டிஜிட்டல் தளங்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அப்போதுதான் திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இந்தத் திரைப்படம் விவசாயத்தை பற்றியும், விவசாயம் சிறப்பாக இல்லாத தருணத்தில் விவசாயிகள் என்ன செய்தார்கள் என்பது குறித்தும் ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக் கொண்டு இயக்குநர் அதனை நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

