பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன் தங்கராஜ் நடித்த ‘குமார சம்பவம்’ படம் விமர்சனம்.
சமூக பிரச்சினைகளுக்காக போராடி வரும் குமாரவேலுக்கு, வாடகைக்கு வீடு கொடுத்து நெருங்கிய நண்பராகிறார் ஜி.எம்.குமார். ஆனால் குமாரவேலுக்கும், ஜி.எம்.குமாரின் பேரனான குமரன் தங்கராஜூவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டிக்கொள்கிறது. சினிமா டைரக்டராக போராடும் பேரன் குமரனுக்காக, சொந்த வீட்டை விற்று பணம் தர முடிவு செய்கிறார் ஜி.எம்.குமார். அப்படி கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கை குமாரவேலுக்கு தரவேண்டும் என்று ஜி.எம்.குமார் உயில் எழுதிவைக்கிறார்.இதனால் குமரனுக்கு கோபம் கொப்பளிக்க, திடீரென குமாரவேல் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அனைவரது சந்தேகப்பார்வையும் குமரன் மீது விழுகிறது. போலீசார் விசாரணையை தொடங்குகிறார்கள். அதன்பிறகு என்ன ஆனது? குமாரவேலின் மர்மத்துக்கு என்ன காரணம்? என்பதே மீதி கதை.
சின்னத்திரையில் ஜொலித்த குமரன் தங்கராஜ், முதல் படத்திலேயே காமெடி, ஆக்ஷன், காதல் என முடிந்தவரை ‘ஸ்கோர்’ செய்துள்ளார். முக பாவணைகளிலும் திறமையை பளிச்சிட செய்துள்ளார்.
பாயல் ராதாகிருஷ்ணா அழகாலும், நடிப்பாலும் கவருகிறார். ஜி.எம்.குமார், குமாரவேலின் அனுபவ நடிப்பு கவனிக்க வைக்கிறது. பால சரவணனின் காமெடி பரவாயில்லை. ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையும் படத்தை நகர்த்த உதவியுள்ளன. பாடல்கள் ஓகே ரகம்.
வித்தியாசமான, கலகலப்பான காட்சிகள் படத்துக்கு பலம். சலிப்பு தட்டும் திரைக்கதை பலவீனம். நாடகம் போல காட்சிகள் நகருகிறது. ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் பார்ப்பது போல இருக்கிறது.
வழக்கமான கதைக்களம் என்றாலும், அதில் புதுமையான காட்சிகளை புகுத்தி கலகலப்பாக படத்தை நகர்த்தியுள்ளார், இயக்குனர் பாலாஜி வேணுகோபால். குமாரவேலின் இறப்புக்கான காரணம் சொல்லுமிடம் புதுமை.