Sun. Dec 22nd, 2024
Spread the love

கண்ணீர் அஞ்சலி

விஜயகாந்த் எனும் ஒரு மிகச்சிறந்த அரசியல் ஆளுமையையும், நேர்த்தியான நடிகர் ஒருவரையும் தமிழ் திரையுலகமும், அரசியல் உலகமும் இழந்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. கேப்டன் என்று பலராலும் பாசத்தோடு அழைக்கப்பட்டு வந்த தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான விஜயகாந்த் இன்று தனது 71 வது வயதில் காலமானார்.
தமிழ் திரையுலக வரலாற்றில் இப்படி ஒரு ஆகச் சிறந்த நடிகர் இதுவரை தோன்றியது இல்லை என்றே சொல்லாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து, கருப்பு நிறம் என்பது நடிப்புக்கு ஒரு தடையல்ல என்பதை ஆழமாக நிரூபித்த ஒரு மாபெரும் கலைஞன் விஜயகாந்த். தமிழ் திரையுலக வரலாற்றிலேயே, ஏன் இந்திய திரையுலக வரலாற்றிலேயே 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாக வேடமேற்று நடித்து புகழ் பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த் அவர்கள்தான்.
1980வது ஆண்டு தனது கலை பயணத்தை துவங்கிய விஜயகாந்த், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான “எங்கள் ஆசான்” என்கின்ற திரைப்படம் வரை சுமார் 152 திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவருடைய நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் “கேப்டன் பிரபாகரன்”.
இது அவருடைய 100வது திரைப்படம், இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அவர் “கேப்டன்” என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா போன்ற பலருடைய திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர் கேப்டன் விஜயகாந்த் என்பது யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவும் முடியாது, மறுக்கவும் முடியாது. தனது வாழ்க்கையை ஒரு பாடமாக்கி சென்று இருக்கிறார் விஜயகாந்த் என்றால் அது நிச்சயம் உண்மைதான். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் , கட்சி தொண்டர்களுக்கும், நமது திரை ஓசை சார்பில் ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறோம்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *