அர்ஷா சாந்தினியை திருமணம் செய்து கொள்வதற்காக தர்ஷன் அவரது அனைத்து சேமிப்புகளையும் வைத்து ஒரு வீடு வாங்குகிறார். அதற்கு பின் திருமணம் செய்துக் கொண்டு அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்போது அந்த வீட்டில் அமானுஷ்யமான சில விஷயங்கள் நடக்கிறது, ரிமோட் பறப்பது, டி.வி சேனல்கள் மாறுவது வேறு நபர்கள் அந்த வீட்டில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது. மறுப்பக்கம் அதே குடியிருப்பில் இருக்கும் காளி வெங்கட் வீட்டிலும் இதே மாதிரி அமானுஷ்ய விஷயங்கள் நடைப்பெறுகிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது இந்த அமானுஷ்யத்திற்கு பின்னணி என்ன? தர்ஷன் வீட்டிற்கும் காளி வெங்கட் வீட்டிற்கு என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒரு நகைச்சுவை கலந்த சைஃபை கதைக்களத்தில் படத்தை இயக்கிய டி.ராஜவேல் அவர்களுக்கு பாராட்டுகள். அறிவியல் சார்ந்த விஷயங்களை எடுத்து இருந்தாலும் அதனை மக்களுக்கு புரியும் படி கூறியுள்ளார். படத்தின் முதல் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒரே வீடு, இரண்டு வெவ்வேறு கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரே வீட்டில் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும், அவர் தனது கேமரா மூலம் வெவ்வேறு வடிவங்களாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.Sivakarthikeyan Productions, Play Smith Studios, South Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.