நாயகன் சந்தானம் யூடியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவராக இருக்கிறார். இவர் வித்தியாசமான முறையில் விமர்சனம் செய்வதால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒரு பக்கம் விமர்சனம் செய்பவர்களை பேயாக வந்து கொலை செய்து வருகிறார் செல்வராகவன். இவர் சந்தானம் மற்றும் அவரது குடும்பமான தந்தை நிழல்கள் ரவி, தாய் கஸ்தூரி, தங்கை யாஷிகா ஆனந்த் ஆகியோரை ஒரு படத்தின் பிரீமியர் காட்சிக்கு அழைக்கிறார். சந்தானம் செல்ல மறுத்தாலும், அவரது குடும்பம் அந்த தியேட்டருக்குள் சென்று விடுகிறது. ஒரு கட்டத்தில் சந்தானமும் அந்த தியேட்டருக்குள் சென்று விடுகிறார். அங்கு இவர்கள் குடும்பம் தியேட்டருக்குள் படத்தின் காட்சிகளாக வருகிறார்கள். இதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் சந்தானம். தன்னையும் தன் குடும்பத்தை சந்தானம் காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஆனால், ஒரு மாய உலகில் சிக்கி இருப்பதை அறிகிறார். இறுதியில் சந்தானம் தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சந்தானம் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவரது டைமிங் காமெடி சூப்பராக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. குறிப்பாக மொட்டை ராஜேந்திரனுடன் அடிக்கும் லூட்டி தியேட்டரில் சரவெடி. நடனம், ஆக்ஷன் என அனைத்து காட்சிகளிலும் சந்தானம் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் கீதிகா பேயாக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். நிழல்கள் ரவி, கஸ்தூரி ஆகியோர் அனுபவ நடிப்பையும், யாஷிகா ஆனந்த் கவர்ச்சியான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராக வரும் கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலம்.
டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த். வழக்கமான பேய் படங்கள் போல் இல்லாமல் இப்படத்தை சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்கள் தேர்வு அவர்களை வேலை வாங்கிய விதம் சிறப்பு.தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அஃப்ரோவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றார் போல் பயணித்து இருக்கிறது. நிஹாரிகா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.