Sun. Feb 2nd, 2025
alangu movie review
Spread the love

தாய், தங்கையுடன் கோயம்புத்தூர் மலை பகுதியில் வாழ்ந்து வருகிறார் நாயகன் குணாநிதி. டிப்ளமோ படிக்கும் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன வேலைகள் செய்து வருகிறார். அப்படி ஒரு நாள் முதலாளி சொன்ன ஒரு நாயை புதைக்க நண்பர்களுடன் செல்கிறார். அப்போது அந்த நாய் உயிருடன் இருப்பதை அறிந்த குணாநிதி, அதை தன்னுடன் அழைத்து சென்று வளர்க்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் கேரள எல்லை பகுதியில் தனது நண்பர்களுடன் நாயை அழைத்துக் கொண்டு வேலைக்கு செல்கிறார் குணாநிதி. கேரளாவில் ஊர் தலைவராக இருக்கும் செம்பன் வினோத், தோட்டத்தில் அனைவரும் வேலை செய்கிறார்கள். செம்பன் வினோத் அதிகம் பாசம் வைத்திருக்கும் அவரது மகளை நாய் ஒன்று கடித்து விடுகிறது. இதனால் கோபமடைந்த செம்பன் வினோத், தன்னுடைய உதவியாளர் சரத் அப்பானியிடம் ஊரில் இருக்கும் நாய்கள் அனைத்தையும் கொல்ல சொல்கிறார். இதில் குணாநிதி வளர்க்கும் நாயும் சிக்குகிறது. இதை காப்பாற்றும் போது சரத் அப்பானியின் கையை வெட்டிவிட்டு குணாநிதி மற்றும் நண்பர்கள் தப்பிக்கிறார்கள். ஆத்திரம் அடையும் சரத் அப்பானி, குணாநிதி அவரது நண்பர்கள் மற்றும் நாயை கொல்ல முயற்சி செய்கிறார். இறுதியில் குணாநிதி தன் நாயுடன் ஊருக்கு சென்றாரா? சரத் அப்பானி, குணாநிதியை தேடி கண்டுபிடித்து கொன்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் குணாநிதி, தர்மன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். தன் குடும்பத்திற்காக வேலைக்குச் செல்வது, நாய் மீது பாசம் காட்டுவது, வில்லனை துணிச்சலுடன் எதிர் கொள்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார். ஊர் தலைவராக வரும் செம்பன் வினோத் அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். தாய்மாமாவாக வரும் காளி வெங்கட், தன் கதை சொல்லி நெகிழ வைத்து இருக்கிறார். சரத் அப்பானி வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். குணாநிதியின் தாயாக நடித்து இருக்கும், ஶ்ரீ ரேகா வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். நண்பர்களாக வரும் இதயகுமார் மற்றும் மாஸ்டர் அஜய் இருவரும் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்கள்.

மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சக்திவேல். இப்படத்தின் மூலம் எல்லா உயிர்களும் ஒரே உயிர்தான் என்பதை உரக்க சொல்லியிருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. அஜீஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக காளியம்மா பாடல் தாளம் போட வைக்கிறது. பாண்டிக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். காடு, மலைகளை அழகாக படம் பிடித்து இருக்கிறார். இப்படத்தை DG Film Company & Magnas ப்ரோடுக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *