திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சேத்தன் நடத்தும் தெருக்கூத்து குழுவில் திரவுபதி வேடம் அணிந்து வருபவர் பாரி இளவழகன். அவருக்கு ஒரு நாளாவது அர்ஜூனன் வேடம் அணிய வேண்டும் என்ற தீராத ஆசை. ஆனால் பாரி இளவழகன் அர்ஜூனன் வேடம் அணிவதற்கு கூத்து வாத்தியார் சேத்தன் தடையாக இருக்கிறார். பாரி இளவழகனுக்கும் சேத்தனின் மகளான அம்மு அபிராமிக்கும் சின்ன வயதிலேயே காதல் இருந்து வருகிறது. ஒரு கட்டத்தில் பெண் கேட்டு சேத்தன் வீட்டுக்கு தனது தாயுடன் செல்கிறார் பாரி இளவழகன். பெண் தர மறுத்ததுடன் அவரை அவமானப்படுத்தி அனுப்புகிறார் சேத்தன். எதிர்ப்பை மீறி அம்மு அபிராமியை பாரி இளவழகன் திருமணம் செய்தாரா? தெருக்கூத்து குழுவில் அர்ஜூனன் வேடம் போட்டாரா? என்பதே படத்தின் மீதி கதை.
நீண்ட கூந்தல், பெண்களுக்கே உரிய எளிய நடை மற்றும் பேச்சு மொழியுடன் பாரி இளவழகன் படத்தில் கல்யாணம் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். உடல்மொழி சிறப்பாக செய்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். கூத்து வாத்தியாராக சேத்தன் வில்லத்தனத்தில் மிரட்டி விடுகிறார். இவரும் பாரி இளவழகனும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். பாரி இளவழகனை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துவதிலும் காதலனுக்காக தந்தை சேத்தனை எதிர்ப்பதிலும் அம்மு அபிராமி கவனிக்க வைத்து இருக்கிறார்.
பூனை குமார் கதாபாத்திரத்தில் வசந்த் மாரிமுத்து மற்றும் நாடக அனுபவமுள்ள நடிகர்கள் தங்களது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். நடிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராக தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை அப்படியே படமாக கொண்டு வந்துள்ளார் பாரி இளவழகன். இரண்டாம் பாதியின் நீளத்தை சுருக்கி இருக்கலாம். தமிழகத்தின் தெருக்கூத்து கலையை அழுத்தமாக சொல்லியதற்கு பாராட்டுகள்.
கோபாலின் ஒளிப்பதிவு மண்மனம் மாறாமல் படம் பிடித்து இருக்கிறது.கதைக்கேற்ற இசையை கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். லெர்ன் அண்ட் டீச் ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.