Thu. Nov 21st, 2024
Spread the love

Deadpool & Wolverine : Review டெட்பூல் தொடரின் மூன்றாவது பாகமான இது, டெட்பூல் பாத்திரத்தை MCU-வுக்குள் கொண்டு வரும் முயற்சியாக உருவாகியிருக்கிறது . அதற்காக ஏற்கெனவே இறந்துபோன வுல்வரின் பாத்திரத்தைத் தூசி தட்டிக் கூட்டி வந்திருக்கிறார்கள். மார்வெல் காமிக்ஸ் படங்கள் என்றாலே MCU-வில் வரும் படங்கள்தான் என்றில்லாமல் ஒரு காலத்தில் ஃபாக்ஸ் நிறுவனம் தரமான மார்வெல் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக எக்ஸ்-மென் எனும் மியூட்டன்ட் இனத்தைச் சேர்ந்த வுல்வரின் (Wolverine) பாத்திரம் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தது. அந்த ரோலில் நடித்த ஹ்யூ ஜாக்மேனுக்கு (Hugh Jackman) இன்றுவரை பெரும் மார்க்கெட் இருக்கிறது. 2017-ல் வெளியான ‘லோகன்’ படத்தோடு ‘வுல்வரின்’ பாத்திரம் இறந்துவிட, அதன்பிறகு ஃபாக்ஸ் எடுத்த எக்ஸ்-மென் படங்கள் பெரும் கவனத்தைப் பெறவில்லை. அதன்பிறகு அதே யுனிவர்ஸில் உருவெடுத்த ‘டெட்பூல்’ (Deadpool) பாத்திரம் திரைக்கதை பாணியில் தொட்டது பெரும் உச்சம். ‘Fourth Wall Breaking’ எனப்படும் யுக்தியில் ரகளையான காமெடியைக் கலந்து கவனிக்க வைத்தார் அதன் நாயகன் ரையன் ரெனால்ட்ஸ்.

எப்படியாவது ‘அவெஞ்சர்ஸ்’ டீமில் இணைந்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் தன்னுடைய உலகத்திலிருந்து கிளம்பி ‘The Sacred Timeline’ (புனித கால வரிசை) இருக்கும் உலகுக்கு வந்து ஹேப்பி ஹோகனைச் சந்திக்கிறார் வேட் வில்சன் (டெட்பூல்). அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட, சோர்ந்துபோய் தன் ‘டெட்பூல்’ வாழ்க்கைக்கு மூடுவிழா நிகழ்த்திவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார். நண்பர்களுடன் அவர் தன் பிறந்தநாள் பார்ட்டியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, ‘TVA’ எனப்படும் ‘Time Variance Authority’ அவரை மிஸ்டர்.பேராடாக்ஸ் என்பவரிடம் கூட்டி/கடத்திச் செல்கிறது. அங்கே தன் உலகைச் சேர்ந்த வுல்வரின் (லோகன்) இறந்துவிட்டதால் தன் உலகமே (டைம்லைன்) அழியப் போகிறது என்பதைக் கண்டறிகிறார் வேட் வில்சன். தன் நண்பர்களைக் காப்பாற்ற, வேறு ஒரு உலகிலிருக்கும் வுல்வரினைத் தேடிச் செல்கிறார். அப்படியொரு வுல்வரினும் கிடைத்துவிட, பிறகு என்ன டெட்பூலும் வுல்வரினும் நிகழ்த்தும் சாகசங்களே படத்தின் கதை.

தன் கரியரின் முக்கியப் பாத்திரமாகக் கருதப்படும் வேட் வில்சன் எனும் டெட்பூலாக மீண்டும் ரையன் ரெனால்ட்ஸ். மற்றுமொருமுறை, டெட்பூல் பாத்திரம் தனக்காகவே எழுதப்பட்டது என்பதை நிரூபித்திருக்கிறார். படம் நெடுக வரும் அவரின் கலாய் வாய்ஸ் ஓவர்கள் சினிமாவின் டெம்ப்ளேட் இலக்கணங்கள் பலவற்றை சுக்கு நூறாக்கிவிடுகின்றன. இந்தப் படத்தில் தன்னுடைய மற்ற ‘வேரியன்ட்களாக’ அவர் நிகழ்த்தும் காமெடி கலாட்டா, கதையைத் தாண்டி வுல்வரின் நடிகரை அவர் ரசிக்கும் விதத்தை வெளிப்படையாகத் திரையைத் தாண்டி ஒலிக்கவிடுவது என ரகளை மீட்டரை உச்சத்திலேயே வைத்திருக்கிறார்.

பிரதான வில்லியாக ‘எக்ஸ்-மென்’ சார்ல்ஸ் சேவியர் பாத்திரத்தின் இரட்டைச் சகோதரி கேஸான்ட்ரா நோவாவாக எம்மா கோரின். அச்சுறுத்தும் அவரின் சக்திகளைக் காட்சிப்படுத்திய விதம் மிரட்டல். இரு துருவங்களாக நாயகர்கள் நிற்க, அவர்களுக்கு ஈடுகொடுத்து மிரட்டும் காட்சிகளில் மிரளவைக்கிறார். இவர்கள் தவிர ஒரு டஜன் துணைப் பாத்திரங்கள், அரை டஜன் கேமியோக்கள் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பலம் பல அடுக்குகள் கொண்ட அதன் திரைக்கதையும் வசனங்களும்தான். குறிப்பாக, எம்.சி.யூ படங்களைத் தயாரிக்கும் டிஸ்னி நிறுவனத்துக்கும் அது விலைக்கு வாங்கிய ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் நின்று கலாய்த்துத் தள்ளும் டெட்பூலின் வசனங்கள் சரவெடி சிரிப்புக்கு கேரன்ட்டி. உதாரணமாகப் பழைய படங்களில் நடித்த சில நடிகர்கள் மீண்டும் புதிய படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியிருப்பார்கள். அதை எல்லாம் மனத்தில் வைத்து சர்ப்ரைஸ் கேமியோக்களைச் சுவாரஸ்யமாக்கிய விதம் மிரட்டலான கற்பனை. இறுதியில் முற்றுப் பெற்றுவிட்ட ஃபாக்ஸ் மார்வெல் படங்களுக்கான அந்த டிரிபியூட் வீடியோ ‘கண்ணுல தண்ணி’ ரக எமோஷன்!

ஒரு கட்டத்தில் இது டெட்பூலை MCU-வில் கொண்டு வரும் முயற்சி என்பதையெல்லாம் கடந்து, இது படம் என்பதையே மறந்து தயாரிப்பு நிறுவனங்களைக் கலாய்த்துத் தள்ளும் ரோஸ்ட்டாக மாறிவிடுவதும் புதுமையான திரை அனுபவம். தயாரிப்பு நிறுவனங்களுக்குள் இருக்கும் ரைட்ஸ் பிரச்னை, அவர்களின் பட்ஜெட் பிரச்னை, சென்சார் ரேட்டிங் பிரச்னை என ஒன்றையும் விட்டுவைக்காமல் கலாய்த்துத் தள்ளியிருக்கிறது இயக்குநர் ஷான் லெவி, ரையன் ரெனால்ட்ஸ் அடங்கிய எழுத்துக் கூட்டணி! டைம் டிராவல் போன்ற விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதையெல்லாம் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி அதிகம் குழப்பம் ஏற்படுத்தாமல் நகர்த்தியிருக்கும் விதமும் இந்தப் படத்தை அனைவருக்கும் ஏற்ற என்டர்டெயினராக மாற்றியிருக்கிறது.

டைட்டிலில் வரும் அந்தச் சண்டைக் காட்சி, டெட்பூலின் பல்வேறு வெர்ஷன்கள், ‘Void’ உலகத்தின் மேக்கிங், அங்கே தொடக்கத்தில் நடக்கும் களேபரங்கள், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி என மேக்கிங்காகவும் மிரட்டியெடுத்திருக்கிறது படக்குழு. ‘Void’ உலகில் இருக்கும் ‘Antman’னின் சூட், அந்த உலகமே கட்டமைக்கப்பட்ட விதம், ரத்தம் தெறிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் என வரைகலை குழுவினருக்கும் பாராட்டுகள். ஜார்ஜ் ரிச்மாண்ட்டின் ஒளிப்பதிவு மிரட்டலானதொரு டோனைப் படத்துக்கு செட் செய்து ஒன்றவைத்துவிடுகிறது. ராப் சைமன்சனின் பின்னணி இசை, குறிப்பாக சூப்பர்ஹீரோ பில்டப் இசை தமிழ் சினிமாவை நினைவூட்டிச் செல்வதும் எதேச்சையான பாசிட்டிவ் விஷயமாக மாறிவிடுகிறது.

முதல் இரண்டு பாகங்களைவிடவும் அதீதமாக இடம்பெற்றிருக்கும் ஆபாச காமெடிகள்/வசனங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் போரடித்துவிடுகின்றன. அதிலும் தன்பால் ஈர்ப்பாளர்களை கேலி செய்யும் அதீத காமெடி வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. இருந்தும் ‘டெட்பூல்’ படங்களே இப்படித்தானே என்று வேண்டுமானால் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.

. பல வருடங்களுக்குப் பிறகுத் தன் ஆஸ்தான வுல்வரின் வேடத்தில் ஹ்யூ ஜாக்மேன் மிரட்டல். தன் பிரத்யேக காமிக்ஸ் உடையுடனே அவர் வலம் வருவது திரைக்குப் புதுசு. வேட் வில்சனை அவர் டீல் செய்யும் விதமும் ஜாலி கேலி டிராமா. வுல்வரினின் பழைய மிடுக்கு, ஸ்டன்ட் காட்சிகள், அந்த அடமேன்ட்டியம் கிளாஸ் (Adamantium Claws) என 90ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியா நினைவுகளை மீண்டும் திரையில் காட்டியதற்கு மார்வெலுக்கு நன்றி.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *