சிறுவயதிலேயே தாய் தந்தையை விபத்தில் இழக்கிறார் நாயகன் தீரஜ். இந்த விபத்தின் போது முகத்தில் காயங்களுடன் உயிர் தப்பிக்கிறார் தீரஜ். தன்னுடைய முகம் தீ காயத்துடன் இருப்பதால் முகத்தை யாருக்கும் காட்டாமல் இருக்கிறார்.
இவர் பிரபல தாதாவான மன்சூர் அலிகான் மகள் ஸ்மிருதி வெங்கட்டை காதலிக்கிறார். ஆனால் ஸ்மிருதி வெங்கட், தீரஜ் காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் தற்கொலை முயற்சி செய்யும் தீரஜ், அவர் உயிர் பிரிவதற்கு முன் ரைட் லெப்ட் என்னும் இரண்டு தேவதைகள் அவர் இறந்து விட்டதாக நினைத்து உயிரை எடுத்து விடுகிறார்கள். தீரஜ் ரைட், லெப்ட் தேவதைகளிடம் சண்டைபோடும் நேரத்தில், அவரது சடலமும் காணாமல் போகிறது.
தற்காலிமாக வேறொரு உடலுக்குள் தீரஜ் ஆத்மா புகுந்துக்கொள்ள காணாமல் போன தீரஜ் உடலை தேடுகிறார்கள்.
இறுதியில் தீரஜின் உடல் கிடைத்ததா? தீரஜ் சடலத்தை திருடியவர்கள் யார்? தீரஜ், ஸ்மிருதி வெங்கட் காதல் கைக்கூடியதா? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தீரஜ், இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். தீ பட்ட காயத்தில் உள்ள தீரஜ் பரிதாபத்தையும், மற்றொரு தீரஜ் துறுதுறுவான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக காதல், காமெடி காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நாயகியாக வரும் ஸ்மிருதி வெங்கட் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். நடிக்கும் வாய்ப்பை அழகாக பயன்படுத்தி இருக்கிறார். ரைட் லெப்ட் – ஆக வரும் முனிஸ்காந்த், காளி வெங்கட் இருவரும் காமெடி செய்து சிரிக்க வைத்து இருக்கிறார்கள். சுனில் ரெட்டி, ஷாரா இருவரும் டைமிங் காமெடியில் கவனிக்க வைத்து இருக்கிறார்கள். மன்சூர் அலிகான், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஃபேண்டஸி காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மீரா மஹாதி. கூடு விட்டு கூடு பாயும் வித்தை, ரைட் லெப்ட் பேசும் வசனங்கள், மேலும் ரைட் லெப்ட் அனிமேஷன் கதாபாத்திரத்தில் ரஜினி, சூர்யா வேடத்தில் தோன்றி வருவது சிறப்பு. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடியால் ரசிக்க வைத்து இருக்கிறார். அனிமேஷன், கிராபிக்ஸ் காட்சிகள் சுவாரஸ்யமாகவும், கலர்புல்லாகவும் அமைந்து இருக்கிறது. வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் அமைத்து இருக்கிறார். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். வெற்றிவேலின் படத்தொகுப்பு கச்சிதம்.