நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று இரவு காலமானார். இந்த நிலையில், அவரின் ஒரிஜினல் பெயர் கேத்தீஸ்வரன் என தெரிகிறது, பெயரை மாற்றியதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று இரவு மரணமடைந்தார். இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் அதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர் நேற்று இரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நடிகர் போண்டா மணியின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
போண்டா மணி மிகவும் பேமஸ் ஆனது வடிவேலு உடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்தபோது தான். குறிப்பாக வடிவேலு உடன் இவர் நடித்த வின்னர், இங்கிலீஸ்காரன், கண்ணும் கண்ணும், மருதமலை, ஆறு போன்ற படங்களின் காமெடி காட்சிகள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் மக்களை மகிழ்வித்துள்ளார் போண்டா மணி. அவரின் ஒரிஜினல் பெயர் கேத்தீஸ்வரன். அவர் ஏன் போண்டா மணி ஆனார் என்பது குறித்து பார்க்கலாம்.
போண்டா மணி இலங்கையை சேர்ந்தவர். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்தபோது, அங்கு ஒரு நிகழ்ச்சிக்காக பாக்கியராஜ் சென்றிருக்கிறார். அப்போது அவருடன் போண்டா மணிக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளார். இங்கு வந்து ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த கேத்தீஸ்வரனுக்கு பெரியளவில் வருமானம் கிடைக்காமல் இருந்துள்ளது.
ஒரு வேலை சோற்றுக்கே காசி இல்லாமல் கஷ்டப்பட்ட கால கட்டங்களில் வெறும் போண்டாவை மட்டும் வாங்கி சாப்பிட்டு நிறைய நாட்கள் பசியாற்றி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமாவில் பெயர் மாற்ற வேண்டும் என சொல்லும்போது. தன்னுடைய குருநாதரான கவுண்டமணி எப்படி தன் பெயரை கவுன்ட்டர் மணி என மாற்றிக் கொண்டாரோ, அதேபோல் தனது பசி தீர்த்த போண்டா உடன் தன் குருநாதர் கவுண்ட மணியின் பெயரில் இருந்து மணியை மட்டும் எடுத்துக்கொண்டு போண்டா மணி என மாற்றிக்கொண்டார்.
பின்னர் அதுவே அவரது அடையாளமாக மாறிவிட்டது. தன் ஒரிஜினல் பெயரான கேத்தீஸ்வரன் என்கிற பெயரை மறக்கடிக்கும் அளவுக்கு போண்டா மணி என்கிற பெயர் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்துள்ளது. .