இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (ஜன.25) மாலை காலமானார். அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்றவர், சிகிச்சை பலனளிக்காததால் இலங்கையில் காலமானார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இன்று இரவு அவர்களின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இளையராஜா தனது எக்ஸ் தளத்தில், அன்பு மகளே என பதிவிட்டு பவதாரிணியின் சிறுவயது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.