நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் ஆனது, தொடர்ந்து, இரண்டாவது வார இறுதியில் ஜெயிலர் 14-வது நாளில் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்தது.
இதனால், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு காசோலை வழங்கியதுடன் சொகுசுக் கார்களையும் பரிசளித்தார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயத்தையும் பரிசாகக் கொடுத்தார். இந்நிலையில், நடிகர் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாகவும் அதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.