Sun. Dec 22nd, 2024
Spread the love

கேரளாவில் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் நயன்தாரா.

இடையில் சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்க, லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொண்டால் சினிமாவிலிருந்து ஒதுங்கும் மனபான்மை பெரும்பாலான நடிகைகளிடம் இருக்கிறது. ஆனால் நயன்தாராவுக்கு அப்படி இல்லை. அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார். படத்தில் ரொமான்ஸ் செய்யும் ஹீரோயினாக மட்டும் வந்து செல்லாமல் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பினார். இது பாலிவுட் திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழை பொறுத்தவரை தனது 75ஆவது படமான அன்னபூரணி படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கும் எல் ஐசி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு தொழில்களிலும் அவர் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில் அவரும், விக்னேஷ் சிவனும் இணைந்து 9 ஸ்கின் என்ற தோல் பராமரிப்பு பிராண்டை தொடங்கினர். மேலும் Femi 9 என்ற சானிட்டரி நாப்கின் தயாரிப்பிலும் இறங்கியிருக்கின்றனர். இவை தவிர கேரளாவில் பெரிய அப்பார்ட்மெண்ட் ஒன்றை அவர்கள் கட்டிவருவதாகவும் அதை வாடகைக்கு விட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் Femi 9 பிராண்டின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் நயன் தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய விக்னேஷ் சிவன், “முன்பெல்லாம் இது என் அம்மாவும், அண்ணியும் பயன்படுத்திய விஷயம். நானே பல முறை இதனை வாங்கி கொடுத்திருக்கிறேன். ஆனால் உள்ளே என்ன இருக்கிறது எப்படி இருக்கும் என்பது தெரியாது. சானிட்டரி பேடின் பயன்பாடு மற்றும் அது எவ்வளவு கடினம் என்பதை நான் புரிந்துகொள்வது இதுவே முதன்முறை ஆகும்.

பொதுவாக கையில் ஏதாவது கிடைத்தால் அதை விளம்பரம் செய்பவர் நயன்தாரா கிடையாது. 8 மாதங்கள் அதை பயன்படுத்தினார். அவர் ஒரு விஷயத்தை பற்றி வெளியே பேச ஆரம்பித்தால் அது அவருடைய இதயத்திலிருந்து தெளிந்த பிறகுதான் பேசுவார். வேறு பிராண்ட் பேடுகளை அவரிடம் கொடுத்தாலும் ஆறு மாதங்கள் இதை பயன்படுத்தினார். உண்மையை சொன்னால் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு இருந்தது.

அதனையடுத்து அக்கா மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இதனை கொடுத்தேன். அவர்களும் அதை பயன்படுத்திவிட்டு பாசிட்டிவ் கருத்துக்களையே சொன்னார். இந்தப் பொருளை விற்கலாம் என்பதைவிட எல்லா பெண்களிடமும் கொண்டு சேர்க்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அப்படித்தான் இந்தத் தயாரிப்பு ஃபெமி 9 என்ற பெயரில் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் நாங்கள் எதையும் சம்பாதிக்க நினைக்கவில்லை. மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களின் மனநிலை மாறுவது பொதுவானதுதான். எனக்கும் அதைப் பற்றிய பெரிய யோசனை எதுவும் இல்லை. அந்த மாதிரியான சமயங்களில் எனது மனைவியும் கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருப்பார். ஓரிரு வாரங்கள் கழித்து சாதாரணமாகிவிடுவார்” என்றார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *