தி மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்திருக்கும் முஸ்தபா, முஸ்தபா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரவீன் சரவணன்
இதில் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், ஜாவா சுந்தரேசன், லிவிங்ஸ்டன், உமா, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, விஜே பார்வதி, விஜே மகேஸ்வரி, மற்றும் சாணக்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக்குழுவினர்கள் -தமிழ்நாடு விநியோகஸ்தர்: சக்தி பிலிம் பேக்டரி, சக்திவேலன் பி, இசை: எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு: கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ, படத்தொகுப்பு: தினேஷ் பொன்ராஜ், மக்கள் தொடர்பு: டிஒன், சுரேஷ் சந்திரா, ஏ.அப்துல் நாசர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகப் பணியாற்றும் கார்த்திக் (சதீஷ்), மருத்துவரான ஸ்டெஃபியை (மோனிகா) காதலிக்கிறhர். எந்த ஒரு கெட்ட பழக்கங்களும் இருக்கக்கூடாது என்ற கண்டிஷனுடன் ஸ்டெஃபி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இரு வீட்டாரும் சம்மதித்து திருமண ஏற்பாடுகள் நடக்கும் வேளையில், கார்த்திக் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் கசிகிறது. உண்மையில் அது கார்த்திக் தனது சினிமா அறிமுகத்திற்காக நடித்த ஒரு படத்தின் டீசர் காட்சி.
ஆனால், இதைச் சொன்னால் காதலி நம்பமாட்டாரோ என்ற பயத்தில், தனது நண்பன் வாசு (சுரேஷ் ரவி) மற்றும் ஹேக்கர் சிட்டி (கருணாகரன்) உதவியுடன் அந்த வீடியோவை இணையத்திலிருந்து நீக்கப் போராடுகிறார். இந்த முயற்சியில் அவர்கள் சந்திக்கும் குழப்பங்களும், வீடியோவின் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மையும் என்ன? இறுதியில் இவர்கள் திருமணம் என்ன ஆனது? என்பதே க்ளைமேக்ஸ்.
கார்த்திக்காக சதீஷ் நாயகனாகத் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில், ஒரு இக்கட்டான சூழலில் சிக்கித்தவிக்கும் இளைஞனாக நடித்திருக்கிறார்.ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் கவர்கிறார். கார்த்திக் கதாபாத்திரத்தில் பயம், நடுக்கம் மற்றும் நகைச்சுவை எனப் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார். நாயகனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்துள்ளார்.
வாசுவாக சுரேஷ் ரவி கார்த்திக்கின் உயிர் நண்பனாக படம் முழுவதும் பயணித்து, பல இடங்களில் நாயகனுக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெறுகிறார். அவருக்கு உதவி செய்வதும், உபத்திரவம் செய்வதுமாக படத்தை நன்றாக நகர்த்தியுள்ளார். இறுதிக் காட்சியில் கொடுக்கும் ட்விஸ்ட் எதிர்பாராதது. சதீஷ{டனான இவரது கெமிஸ்ட்ரி படத்தின் பலம். மோனிகா சின்னகொட்லா கார்த்திக்கின் காதலி ஸ்டெஃபியாகத் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா தத்தா வீடியோவில் வரும் பெண்ணாகத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளார்.ஜாவா சுந்தரேசன், லிவிங்ஸ்டன், உமா, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவெல் நவகீதன், விஜே பார்வதி, விஜே மகேஸ்வரி, மற்றும் சாணக்யன் கதையின் ஓட்டத்திற்குத் ஏற்ப சில இடங்களில் வந்து செல்கின்றனர்.
ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் சராசரி ரகம் என்றாலும், பின்னணி இசை நகைச்சுவை காட்சிகளுக்கு மெருகூட்டுகிறது. ஓளிப்பதிவாளர் விஷ்ணு ஸ்ரீ படத்தின் தன்மையை உணர்ந்து கலர்ஃபுல்லாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ் முதல் பாதியைச் செதுக்கிய விதம் சிறப்பு, ஆனால் இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்
. இயக்குநர் பிரவீன் சரவணன், தற்கால டிஜிட்டல் உலகில் ஒரு வீடியோ ஒருவரின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதை பொழுதுபோக்கு படமாக ஒரு ‘காமெடி ஆஃப் எரர்ஸ்’ பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார். முதல் பாதி கலகலப்பான நகைச்சுவை காட்சிகளால் விறுவிறுப்பாக நகர்கிறது. நண்பர்கள் சேர்ந்து செய்யும் குளறுபடிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை அதே பாணியில் செல்வதால் சற்று தொய்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் வரும் எதிர்பாராத ட்விஸ்ட் படத்திற்கு ஒரு புதுமையைச் சேர்க்கிறது.
மொத்தத்தில் தி மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்திருக்கும் முஸ்தபா, முஸ்தபா நண்பர்களுடன் சேர்ந்து சிரித்து மகிழக்கூடிய ஒரு ‘டைம்பாஸ்’ திரைப்படம்.

