Tue. Mar 10th, 2026
மெல்லிசை/Thiraiosai.comமெல்லிசை/Thiraiosai.com
Spread the love

ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, படத்தொகுப்பு செய்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் திரவ்.

இதில் கிஷோர், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் :-இசை: சங்கர் ரங்கராஜன் , ஒளிப்பதிவு: தேவராஜ் ,மக்கள் தொடர்பு: டிஒன், சுரேஷ் சந்திரா, ஏ.அப்துல் நாசர்

ஒரு பாடகராக வேண்டும் என்ற கனவைக் கொண்ட ஒரு தந்தையின் வாழ்க்கையைச் சுற்றி இப்படம் சுழல்கிறது. தனது லட்சியத்தையும் குடும்ப பொறுப்புகளையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கும் போது அவர்​ எதிர்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான, தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான போராட்டங்களை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. தீபக் (ஜஸ்வந்த் மணிகண்டன்) மற்றும் மகள் யாழினி (தனன்யா வர்ஷினி) இருவரும் கடன் பிரச்சனையால் பாழடைந்து கிடங்கும் தங்களது பெற்றோர் வாழ்ந்த வீட்டை விற்க முடிவு செய்கின்றனர். விற்பதற்கு முன் அந்த வீட்டை பார்க்க செல்வது போல் பழைய நினைவுகளில் மூழ்குவது போல் கதைக்களம் தொடங்குகிறது. இவர்களின் தந்தை ராஜன்(கிஷோர்) தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்ற தாய் வித்யா (சுபத்ரா ராபர்ட்) அதே பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றுகிறார். தன் தந்தையின் அபார பாடும் திறமையை பார்க்கும் எட்டு வயது யாழினி, தன் தந்தையை வற்புறுத்தி தனியார் தொலைக்காட்சியில் பாட்டு போட்டியில் கலந்த கொள்ள வைக்கிறார். அந்தப் போட்டியில் ராஜன் பல சுற்றுகளில் திறமையாக முன்னேறி வெற்றி பெற்று புகழடைகிறார்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் போதே மகன் தீபக்கின் அபார திறமையால் ஐடி கம்பெனியில் வேலை கிடைக்கிறது. தீபக் சம்பாதிக்க தொடங்கியவுடன் தந்தையை அலட்சியமாவும் ஏளனமாகவும் பார்த்து உதாசீனப்படுத்துகிறான். இந்த நேரத்தில் பள்ளிக்கு புதிய முதல்வர் வர ராஜன் நெருக்கடியை சந்திக்கிறார். பள்ளிக்கும் பாட்டு போட்டிக்கும் இடையே நேரத்தை செலவிடமுடியாமல் திணற வேலை பறிபோகிறது. இதனால் மனஉளைச்சல் உண்டாகும் ராஜனை சமாதானப்படுத்தி ஊக்கப்படுத்தும் மகள் யாழினி பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வைக்கிறார். இறுதிப் போட்டியில் ஜெயித்து, மனைவியின் சிபாரிசால் வேலையும் கிடைக்க சந்தோஷமாக ஆட்டோவில் செல்கின்றனர். எதிர்பாராதவிதமாக விபத்தில் பெற்றோர் இறக்க, தீபக், யாழினி அனாதையாகின்றனர்.

வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தாலும், இந்த பேரடி இருவர் வாழ்க்கையையும் புரட்டி போட்டு கடனில் முழ்கடித்துவிடுகிறது. இறுதியில் இருவரும் தங்களது வீட்டை விற்று கடனை அடைத்தார்களா? அல்லது வீட்டை மீட்டார்களா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

கிஷோர் தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி, மென்மையான அமைதியான குணம், குழந்தைகளின் மேல் பாசம், மனைவி மேல் அன்பு, பாடல்களின் மேல் அதீத பற்று, அதிர்ந்து மறுத்து பேசாத நல்ல உள்ளம் கொண்ட மனிதராக திகழ்கிறார். குடும்பத்திற்கும் தன்னுடைய திறமைக்கும் இடையே மாட்டிக் கொண்டு ராஜனின் உள் போராட்டத்தை வெளிப்படுத்தும் இடங்களில் அவருடைய நடிப்பு பளிச்சிடுகிறது.

வித்யாவாக சுபத்ரா ராபர்ட் ஒரு சிறந்த மனைவியாக, குடும்பத்தை அரவணைத்து செல்லுதல், கணவரை வழிநடத்தும் விதம், குழந்தைகளை கண்டிப்புடனும், பாசத்துடனும் கையாள்வது, இக்கட்டான நேரத்தில் கணவனுக்கு உற்ற துணையாக இருந்து வேலையை போராடி வாங்கி கொடுப்பது, கணவரின் வெற்றியை கண்டு பூரிப்பது என்று நெகிழ்ச்சியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் உறுதிமிக்க பெண்மணியாக பங்களிப்பை கொடுத்துள்ளார்.

ஜார்ஜ் மரியன் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் அந்தந்த பாத்திரங்களுக்கு ஆழத்தை கொண்டு வருகிறார்கள், அதே நேரத்தில் ஜஸ்வந்த் மணிகண்டன் திடீர் வெற்றியால் கண்மூடித்தனமான இளைஞனின் சிக்கல்களை கண் முன் நிறுத்தி, பின்னர் தன் தந்தையின் நினைவால் வருந்தும் காட்சிகளில் திறம்பட செய்துள்ளார்

மகள் யாழினியாக தனன்யா வர்ஷினி படத்தின் பள்ளி வயதிலும், இளம் வயதிலும் தன் பாசத்திற்குரிய தந்தையின் நினைவுகளில் கண்ணீர் மல்க விவரிக்கும் காட்சிகள், ஒவ்வொரு அறையிலும் தன்னுடைய ஞாபகங்களை நினைவுபடுத்தி எண்ணி வருந்துவது, பெற்றோரின் இழப்பை தாங்க முடியாமல் கதறுவது, இறுதியில் கடன் கொடுத்தவர்களிடம் நிதானமாக பேசி விட்டு செல்லும் காட்சிகளில் அசத்தியுள்ளார்

இவர்களுடன் புரோக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி ஆகியோர் பங்களிப்பு கவனிக்க வைக்கிறது.ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தி, இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜனின் இசை – பின்னணி இசை, படத்தொகுப்பாளர் திரவ் ஆகியோர் தொழில்நுட்ப ரீதியில் குடும்ப பாசத்தின் கதைக்களத்திற்கு முதுகெலும்பாக இருந்து காட்சிகளை தத்ரூபாக கொடுத்திருப்பதில் முழு பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

மெல்லிசை/Thiraiosai.com

படத்தின் தயாரிப்பாளராகவும், எடிட்டராகவும் பணியாற்றியிருக்கும் இயக்குனர் திரவ் ஜி, அடிப்படையான மற்றும் ஆழமான தொடர்புள்ள தந்தை, மகள் பாசத்தில் உணர்ச்சிகரமான பயணிக்கும் கதைக்களத்தை வலிமையுடன் உயிர்ப்புடன் சேர்த்து கொடுத்துள்ளார்.

ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை பெற்றோர்களின் தியாகத்தை உணர்ந்து பிள்ளைகள் நினைவுகூர்வது போல் கதைக்களத்தை உருவாக்கி, அதில் பிள்ளைகள் புரிந்து கொள்ளாமல் நடக்கும் விதம், தந்தையின் தியாகம், தாயின் அரவணைப்பை காலம் கடந்து உணர்ந்து வருந்துவது, பெற்றோர்கள் இல்லாமல் வாழும் வாழ்க்கை என்று தோய்வில்லாமல் இயல்பாகவும், எளிமையாகவும் அனைவரையும் நெகழ்ச்சியடைவும் விதமாகவும் கொடுத்துள்ளார் இயக்குனர் திரவ். லட்சியம், ஈகோ மற்றும் பாசம் அவர்களின் வாழ்க்கையின் இரண்டு காலவரிசைகளுக்கு இடையில் கதை நகர்ந்து அமைதியான, வாழ்க்கையின் தருணங்களுக்கு ஆதரவாக ஃப்ளாஷ்பேக்குகள் மூலம் கதையை வடிவமைப்பதன் மூலம், அவர் ஒரு ஏக்கம் நிறைந்த சூழலை திறம்பட உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் திரவ்.

மொத்தத்தில் ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் மெல்லிசை வருடும் இணை பிரியா பாச நினைவலைகளில் உயிர்பிக்கும் தருணங்களில் மனதை நெகழ்ச்சியுடன் மூழ்கடிக்கும்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *