டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கும் பராசக்தி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா.
இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன், பிருத்வி பாண்டியராஜன், காளி வெங்கட், கொலப்புளி லீலா, சேத்தன், பிரகாஷ், குரு சோமசுந்தரம், தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் :-இசை: ஜி.வி. பிரகாஷ், ஒளிப்பதிவு: ரவி கே.சந்திரன், ஐ.எஸ்.சி, எழுத்து: சுதா கொங்கரா, அர்ஜுன் நடேசன், ஆலோசக நிபுணர் : பேராசிரியர் டாக்டர் ஏ.ராமசாமி, தயாரிப்பு வடிவமைப்பு : எம்.ஆர்.கார்த்திக் ராஜ்குமார், அதிரடி ஆக்ஷன்: சுப்ரீம் சுந்தர், எடிட்டர்: சதீஷ் சூர்யா, இரண்டாவது யூனிட் இயக்குனர் – போஸ்ட் புரொடக்ஷன் ஹெட் : மிலிந்த் ராவ், கலை இயக்குனர் : எஸ்.அண்ணாதுரை, பாடல்வரிகள் : யுகபாரதி, ஏகாதசி, அறிவு, கபேர் வாசுகி, ஜெயஸ்ரீ மதிமாறன், கூடுதல் திரைக்கதை : கணேஷா, கூடுதல் வசனங்கள் : மதன் கார்க்கி, ஷான் கருப்புசாமி, ஆடைவடிவமைப்பு : பூர்ணிமா, ஆடை: டி. அருண் மோகன், நடனம்: பிருந்தா, க்ருதி மகேஷ், அனுஷா விஸ்வநாதன், ஒலிவடிவமைப்பு : சுரேன். ஜி – எஸ்.அழகியகூத்தன், வி எஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் : கே.வி. சஞ்சித், வண்ணம்: ஆஷிர்வாத் ஹட்கர்முடி மற்றும் ஒப்பனை : செரினா, எஸ். ஷைட் மாலிக்ஸ்டில்ஸ்: சிஎச். பாலு, தயாரிப்பு நிர்வாகி : டி.ஹரிஹரசுதன், நிர்வாக தயாரிப்பாளர்கள்: எம்.பி. செந்தேல், ரியா கொங்கரா, திரையரங்க வெளியீடு – இன்பன் உதயநிதி வழங்கும் ரெட் ஜெயண்ட் மூவீஸ், மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, சதீஷ் (ஏஐஎம்).
கதை: 1959 ல் கதைக்களம் ஆரம்பமாகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் செழியன் (சிவகார்த்திகேயன்) இந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு படை என்ற இளைஞர் படையின் தலைவனாக இருந்து இரயில்களை மறித்து போராட்டம் பண்ணுவது, பெட்டிகளை எரித்து எதிர்ப்பை காட்டுவது என்று தமிழ் மொழிக்கு ஆதரவாக பெரும் திரளாக போராட்டத்தை வழி நடத்துகிறார். ஒரு சமயம் மதுரையில் அமைச்சர்கள் வரும் இரயிலை மறித்து போராட்டம் பண்ண திட்டமிடுகின்றனர். அந்த இரயிலில் காவல் அதிகாரி திரு(ரவிமோகன்) பயணம் செய்ய, போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொள்ள, அவர்களை தடுக்க முடியாமல் அமைச்சர்களை மட்டும் காப்பாற்றும் திருவினால் செழியனின் நண்பன் அந்த போராட்டத்தில் உயிரிழக்கிறார். இந்த சம்பவத்தால் காவல் அதிகாரி திருவின் கைவிரல்கள் பாதிக்கப்பட, அதனுடன் உயர் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டு வேலை மாற்றம் செய்யப்படுகிறார். பெரும் கோபத்தில் இருக்கும் திரு, செழியனை பழி வாங்க நினைக்கிறார். அதே சமயம் இதே சம்பவத்தால் நண்பனின் மரணத்தால் பாதிக்கப்பட்டு மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கும் செழியன் புறநானூறு படையை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்துகிறார். அந்த நேரத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1965 வரை இந்தி மொழியை திணிக்க மாட்டோம், அவரவர் தாய் மொழியிலே அலுவல்கள் மேற்கொள்ளலாம் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கிறார். அது முதல் இந்தி திணிப்பு போராட்டங்கள் வெகுவாக குறைந்து காணப்பட்டன. காலங்கள் உருண்டோட திடீரென இரயில்வேயில் வேலை செய்யும் தந்தை இறக்க செழியனுக்கு இரயில்வேயில் எஞ்சினில் நிலக்கரி அள்ளி நிரப்பும் வேலை கிடைக்க செழியன் இந்தி எதிர்ப்பு பக்கம் செல்லாமல் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார். இந்த வருமானத்தில் தம்பி சின்னதுரையை (அதர்வா) படிக்க வைக்கிறார். பாட்டியின் அரவணைப்பில் சகோதரர்கள் இருவரும் பாசத்துடன் வளர்கிறார்கள். இந்நிலையில் செழியன் உயர் பதவிக்காக இந்தி படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட, எதிர் வீட்டில் இருக்கும் அமைச்சரின் மகள் வானொலி நிலையத்தில் பணியாற்றும் தெலுங்கு பெண் ரத்னமாலா (ஸ்ரீலீலா)விடம் பாடம் கற்கிறார். ரத்னமாலா செழியனின் தம்பி கல்லூரி மாணவனான சின்னதுரையுடன் சேர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களில் கலந்து கொள்பவர். கல்லூரி மாணவனான சின்னதுரை வெளியே தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள ஒரு கட்டத்தில் சின்னதுரையின் செயல்பாடுகளை செழியன் கண்டுபிடித்து எதிர்ப்பும் தெரிவிக்கிறார். அதர்வா தன்னுடைய கொள்கையில் தீவிரமாக இருக்க தம்பியின் காலை உடைத்து வீட்டிலேயே முடங்க செய்து விடுகிறார். காவல் அதிகாரி திரு மத்திய அரசிடமிருந்து சிறப்பு அதிகாரம் பெற்று மாணவர் படையை அடக்க தமிழ்நாட்டிற்கு வந்து மாநில அரசின் ஒத்துழைப்போடு களமிறங்கி தேவைப்பட்டால் சுடுவதற்கும் ஒப்புதல் பெறுகிறார். 1964 ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு இறக்க, மொழி பிரச்சனை அரசியலமைப்பு சட்ட மாற்றங்களில் இடம் பெறாததால் 1965 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி திணிப்பு அமல்படுத்தப்படும் என்ற சூழ்நிலையில் பிற மொழி மாநிலங்களில் போராட்டம் விஸ்வரூபமெடுக்கிறது. இந்நிலையில் செழியன் பதவி உயர்விற்காக நேர்காணலுக்கு செல்ல, அங்கே இந்தி ஒரளவு தெரிந்திருந்தும், சரளமாக பேச,எழுத வேண்டும் என்று காரணம் சொல்லி நிராகரிக்கப்படுகிறார். இதனால் விரக்தியில் வெளியே வரும் போது இரயில் சினேகிதர் ஒருவர் மொழி பிரச்சனையில் வேலை கிடைக்காமல் தீக்குளித்து இறக்கிறார்.இதே சமயம் மதுரையில் நடக்கும் ஒரு விழாவில் இந்திக்கு ஆதரவாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கருப்புக் கொடி காட்டுவது என்று சின்னதுரை தலைமையில் மாணவர் படையினர் திட்டமிட இந்த போராட்டத்தை அடக்க காவல் அதிகாரி திரு களம் இறங்குகிறார். செழியன் கண்ணெதிரே தம்பி சின்னதுரையை காவல் அதிகாரி திரு சுட்டு கொன்று விட்டு, செழியனையும் கைது செய்து எஃப் ஐ ஆர் போடாமல் அவரை துன்புறுத்துகிறார். இந்திக்கு எதிராக மீண்டும் போராட ‘புறநானூறு படை’யின் போராட்டங்கள் தீவிரமடைகின்றது. சிறையிலிருந்து ஒரு நல்ல காவலர் உதவி செய்ய செழியன் தப்பித்து டெல்லிக்கு சென்று வட மாநிலத்தில் இயங்கும் புறநானூறு படை உதவியுடன் மீண்டும் களத்தில் இறங்கி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்து அவரின் தந்தை ஜவஹர்லால் நேருவின் வாய் மொழி உத்தரவை காப்பாற்றுமாறு போராட்டத்தை நடத்துகிறார். அந்த போராட்டத்தில் பிரதமரின் முன் கோவை விஜயத்தின் போது இந்தி திணிப்புக்கு எதிராக மக்கள் ஆதரவாக இருப்பதை கையெழுத்து பதிவுகள் மூலமும் மாணவர்களின் எழுச்சியை நிரூபிப்பதாக செழியன் கூறுகிறார். அதன் பின் மதுரைக்கு வரும் செழியன் அதற்கான ஏற்பாடுகளை செய்து அனைவரும் பொள்ளாச்சியில் ஒன்று கூடி தென் மாநிலங்களிலிருக்கும் புறநானூறு மாணவ படைகளை ஒண்றினைத்து இந்தி திணிப்புக்கு எதிரான பிரச்சார போஸ்டர்கள், கருப்பு கொடி காட்டவும் அங்கிருந்து கோவை செல்ல திட்டமிடுகின்றனர். இதனிடையே பிரதமர் வரும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வரும் திரு, மாணவர் படையின் திட்டங்களை முன் கூட்டியே அறிந்து மத்திய அரசு படைகளை வரவழைக்கிறார். பொள்ளாச்சியிலிருந்து போலீசிற்கு தெரியாமல் போராட்டத்தில் ஈடுபட இருக்கும் அனைவரும் கோவைக்கு தப்பிச் சென்றனரா? இறுதியில் திருவால் கோவையில் நடக்கும் மாணவர் பேரணியை தடுக்க முடிந்ததா? பிரதமர் வருகையின் போது செழியனால் இந்தி திணிப்பு எதிர்ப்பை ஒற்றுமையுடன் நடத்தி காட்ட முடிந்ததா? அரசு அவிழ்த்துவிட்ட அடக்கு முறை – துப்பாக்கிச் சூடுகள் காரணமாக அமைதியாகத் தொடங்கிய மாணவரின் அறப்போர் எரிமலையாக வெடித்திட்டதா? இறுதியில் இந்தி திணிப்புக்கு எதிராக அமலாக்கும் சட்டம் இயற்றப்பட்டதா? இதற்கான அடித்தளம் வித்தட்ட அரசியல் தலைவர்களின் பங்களிப்பு என்ன? என்பதே படத்தின் உண்மை கலந்த சித்தரிக்கப்பட்ட மீதிக்கதை.
சிவகார்த்திகேயன்: செழியனாக சிவகார்த்திகேயன் ஒவ்வொரு காட்சியிலும் தத்ரூபமான தேர்ந்த நடிப்பில் ஜொலிக்கிறார். ஆரம்ப காட்சியில் ஆக்ரோஷ இளைஞராக களமிறங்கி இடையில் சாந்தமாக குடும்பத்தை கவனிக்கும் சாதாரண இளைஞராக பயணித்து இறுதியில் தன்னுடன் அடக்கி வைத்திருந்த தமிழ் மொழி வேட்கையால் எதிரிகளை சுட்டெரித்து துவம்சம் செய்யும் கதாபாத்திரம் அதகளம். வீரம் கொண்ட மாணவத் தலைவன், பாசம் கொண்ட அண்ணன், நேசம் கொண்ட காதலன், அன்பான பேரன், எழுச்சி மிகு வசனங்களால் துளைத்தெடுக்கும் மொழி பற்று மிக்க எழுச்சிமிக்க இளைஞன், தைரியமிக்க வீரியமிக்க போராளி என்று 1959 முதல் 1965 ஆண்டு வரை நடக்கும் கதைக்களத்திற்கு தன்னுடைய முழு பங்களிப்புடன் 25 படத்தை கொடுத்து அசத்தியுள்ளார் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள்.
ரவி மோகன்: எதிர்மறை கதாபாத்திரத்தில் திருநாடனாக ரவி மோகன். தன் தந்தையின் மேல் இருக்கும் கோபம், அதனால் வேலையில் ஏற்படும் அவமானம், தமிழ் மொழி வெறுப்பின் உச்சபட்ச அகங்கார அதிகார வர்க்கத்தின் அதிகாரியாக, பழி வாங்க துடிக்கும் மிரட்டலுடன் படம் முழுவதும் வரும் காட்சியில் வெறுப்புடன் பழிஉணர்ச்சியுடன் நடந்து கொள்ளும் விதத்தில் ஆக்ஷன் களத்தில் தனித்து நின்று தனி ஒருவனாக நடிப்பால் ஆக்ரமிக்கிறார்.
அதர்வா: இந்தி எதிர்ப்பு போராட்ட கல்லூரி மாணவனாக, அண்ணன் மீது பாசம் கொண்ட தம்பியாக, இளமை துள்ளலுடன் ஆர்பரிக்கும் மாணவ படைத்தலைவனாக தன்னுடைய இயல்பான நடிப்பால் கவர்ந்து விடுகிறார்.
ஸ்ரீலீலா: அமைச்சரின் செல்ல மகள், வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக தன்னால் முடிந்த உதவிகளை சிறப்பாக செய்யும் தெலுங்கு பெண் ரத்னமாலாவாக ஸ்ரீலீலா தன்னுடைய துடுக்கத்தனம், வசீகரமான அழகாலும், ஸ்டைலாலும், சுழன்று ஆடும் நடனத்தாலும், இறுதிக் காட்சியில் வீரமிக்க வசனங்கள் பேசி நெகிழ வைத்து கை தட்டல் பெறும் தைரியம் நிறைந்த இளம் பெண்ணாக மிளிர்கிறார். துணை கதாபாத்திரங்கள்: அரசியல் தலைவர் அண்ணாவாக சேத்தன், செழியனின் உயிர் நண்பனாக கோலி சோடா முதலாளி பிருத்விபாண்டியராஜன், பொள்ளாச்சியில் உதவிகரம் நீட்டும் காளி வெங்கட், பாட்டியாக கொலப்புளி லீலா, முதலமைச்சராக பிரகாஷ், கருணாவாக குரு சோமசுந்தரம், தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பசில் என்று மாணவர்;களின் எழுச்சி படையில் எண்ணற்ற கலைஞர்களின் கடும் உழைப்பு படத்திற்கு பலம்.
இசை: ஜி.வி. பிரகாஷ் 100வது படத்தின் இசையில் யுகபாரதி, ஏகாதசி, அறிவு, கபேர் வாசுகி, ஜெயஸ்ரீ மதிமாறன், பாடல்கள் ரசிக்கும் ரகம் என்றால் பின்னணி இசை அசத்தல் ரகம். அனைத்து காட்சிகளையும் மெய் மறக்கச் செய்யும் அளவிற்கு தன்னுடைய பங்களிப்பால் ஈர்த்துள்ளார்.
ஒளிப்பதிவு: 1960 காலகட்டங்களில் நடக்கும் கதைக்களத்திற்கேற்ற கலர் டோன்கள், இரவில் நடக்கும் சம்பவங்களை தத்ரூபமான காட்சிக்கோணங்களால் படம் பிடித்து, ரயில் சண்டை, ரயில் எரிப்பு, பஸ் பயணம், காவல் நிலையங்கள், இந்தி திணிப்பு போராட்டங்கள், சண்டைக் காட்சிகள் என்று அனைத்தையும் அசத்தலுடன் பதிவு செய்துள்ளார்.
கலை: படத்தின் முக்கியத்துவம் நிறைந்த காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் கலை இயக்குனர் எஸ்.அண்ணாதுரை. ஹாட்ஸ் ஆஃப்.
அதிரடி: சுப்ரீம் சுந்தரின் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலுடன் உலகத்தரம்.
கூடுதல் திரைக்கதை : கணேஷா, கூடுதல் வசனங்கள் : மதன் கார்க்கி, ஷான் கருப்புசாமி ஆகியோரின் பங்களிப்பு சிறப்புடன் உதவி இருக்கிறது.
படத்தொகுப்பு: சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு படத்தின் ஆரம்ப காட்சிகள் முதல் க்ளைமேக்ஸ் காட்சிகள் வரை விறுவிறுப்பு குறையாமல் கவனத்தை சிதற விடாமல் கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.
இயக்கம்: பராசக்தி படத்தை செதுக்கி எழுதி இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இந்தி திணிப்புக்கு எதிராக களமிறங்கிய மாணவர்களின் புரட்சி, அதிகார துஷ்பிரயோகம், மொழி அரசியல், அரசியல் கொள்கை கொண்ட தலைவர்கள், அரசியல் மற்றும் மக்களை ஒன்றிணைத்த போராட்ட களங்கள், மாணவ இயக்கங்கள், அதை வழி நடத்தும் அமைப்புகள், இந்தி திணிப்புக்கு மட்டுமே எதிரானவர்கள்-இந்தி பேசுபவர்களுக்கு அல்ல என்பதை அழுத்தமாக சொல்லி எங்கும் நிறைந்த சக்திவாய்ந்த மற்றும் லட்சிய எழுச்சிமிக்க முயற்சி படைப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. சுதா கொங்கராவின் பராசக்தி 1960 களின் இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிராக அமைக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் தமிழக வரலாற்றில் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட தருணம். இந்த இயக்கம், தமிழர்களை மட்டும் உள்ளடக்கியதாக இல்லாமல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளதை பராசக்தி படம் சிறப்பாக சித்தரித்துள்ளது. இந்தப் படத்தில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட கோபம் மற்றும் தார்மீகக் குழப்பம்-தனிப்பட்ட ஆசைக்கும் அரசியல் விழிப்புக்கும் இடையில் சிக்கிய ஒரு மனிதனின் கலவையாகும். உணர்ச்சி போராட்டம், குடும்ப வாழ்க்கை மற்றும் அரசியல் அதிகாரத்தை உறுதியாக நிலைநிறுத்தியிருத்தும் முதல் பாதி பின்னணியில் கொதித்துக்கொண்டிருக்கும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் அவசியத்தை இரண்டாம் பாதி மிகச் சிறப்புடன் பூர்த்தி செய்துள்ளது. பராசக்தி, பல வழிகளில், மிகைப்படுத்தாத ரசிக்கத்தக்க நோக்கத்தின் துணிச்சலை துல்லியமாக தேவைப்படும் இடத்தில் விரிவாக செயல்படுத்தியிருக்கும் படம்.
தீர்ப்பு: மொத்தத்தில் டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கும் சுதா கொங்கராவின் பராசக்தி அதிகார அரசியல் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்ட தாய்மொழியை மீட்டெடுத்த மாணவர் படையின் அபார சக்தீயை தொட்டால் தீப்பொறியுடன் அனல் பறக்கும் என்பதை மெய்பித்திருக்கும் படம்.

