Tue. Nov 25th, 2025
Spread the love

2022 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பின்லாந்து திரைப்படம் “SISU”. இப்படம் இரண்டாம் உலகப் போரில் முடியும் தருவாயில் 1944 காலகட்டத்தில் நடக்கும் கதையாகும். பின்லாந்தில் வாழும் முன்னாள் கமாண்டோ அட்டாமி கோர்பி பின்லாந்தின் வடக்கு சமவெளியில் தனியே தோண்டுதல் பணி நடத்தி தங்கத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லும்போது ஹிட்லரின் நாஜி படை அதிகாரிகள் அவரின் தங்கத்தை பரித்துச் செல்கின்றனர். அட்டாமி கோர்பி அவர்களை துரத்திச் சென்று தனது தங்கத்தை மீட்பதே கதை. சாதராண முதியவர் என்ற பிம்பத்துக்கு பின்னால் அட்டாமி கோர்பியின் மிகவும் ஆக்ரோஷமான முன்னாள் கமாண்டோ என்ற பிம்பம் வெளிப்படும். இதுவே படத்தின் உயிர்நாடி. அட்டாமி கோர்பியை, “SISU”என்ற பின்னாலாந்தின் அர்பேன் லெஜண்ட் ஆக அவ்வூர் மக்கள் கருதுவார்கள். படம் முழு அட்டாமி கோர்பி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த பிம்பத்தோடு அவர் எதிர்கொள்ளப் போகும் புதிய சவால் என்ன?. அதுவே தற்போது வெளியாகி உள்ள ‘SISU – தி ரோட் டு ரிவெஞ்ச்’ என்ற இரண்டாம் பாகம்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 1946 காலகட்டத்தில் SISU இரண்டாம் பாக கதை நகர்கிறது. இரண்டாம் உலகப் போரில் தனது குடும்பத்தை இழந்த பிறகு, அட்டாமி கோர்பி அவர்களுடன் வாழ்ந்த மர வீட்டை பிரித்து மூட்டை கட்டி அமைதியான ஒரு இடத்தில் வீட்டை மீண்டும் உருவாக்கி வாழலாம் என புறப்படுகிறார். இதன் போது அவர் சோவியத் யூனியன் எல்லைக்குள்  நுழையவே  சோவியத் யூனியனின் செம்படைத் தலைவர் இகோர் அட்டாமியைக் கொல்ல தனது படைகளுடன் செல்கிறார். அவர்களே தனது குடும்பத்தை கொன்றவர்கள் எனவும் அட்டாமி கோர்பி அறிகிறார். அவர்களிடம் இருந்து தான் பெரிதாக கருதும் வீட்டின் மர பாகங்களை எப்படி அட்டாமி காப்பாற்றினார், தனது குடும்பத்துக்காக அவர்களை பழிவாங்கினாரா, அமைதியாக இடத்தில் மீண்டும் வீட்டை கட்டும் தனது கனவை நிறைவேற்றினாரா என்பதுதான் மீதிக்கதை.

இயக்கம்:

இந்த முழு படத்திலும் பத்து பக்க வசனங்கள் கூட இல்லை. படம் முழுவதும் ஆக்ஷனால் நிரம்பியுள்ளது. துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, ரத்தம் என ஒரே சண்டை மையமாக கிராபிக் வலயன்ஸ் காட்சிகளுடன் படம் நகர்கிறது. எனவே ஆக்ஷன் ரசிகர்களுக்கு படம் நல்ல தீனியாக அமைந்துள்ளது.

முதல் பாகத்தை போலவே மிகவும் ஆக்ரோஷமான காட்சிகளுடன் படம் நகர்கிறது. இருப்பினும் காட்சிகளிலும் கதையிலும் முதல் பாகத்தில் இருந்த வலு குறைந்துள்ளதாக தெரிகிறது. முதல் பாகத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாதபோது வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானதால் அவ்வாறு தோன்றலாம்.

நடிகர்கள்:

அட்டாமி கோர்பி கதாபாத்திரத்தில் பின்லாந்து நடிகர் ஜோர்ம டோம்மிலா நடித்துள்ளார். படம் முழுவதும் அவர் பேசாமல், தனது முதிர்ந்த மற்றும் ஆக்ரோஷமான உடல் மொழியால் கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார்.

சோவியத் செம்படைகளின் தலைவராக இகோர் கதாபாத்திரத்தில் ஜாக் டூல்டன் நடித்துள்ளார். அட்டாமி கோர்பியை மையமாக வைத்தே கதை நகர்வதால் மற்ற பாத்திரங்கள் பெரிதும் வெளித்தெரியவில்லை.

ஒளிப்பதிவு:

படத்தின் ஒளிப்பதிவை மிகா ஒராசமா கையாண்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்  அடர்ந்த காடுகளின் பின்னணியில் நடக்கும் கதையை நம்பும்படியாக படம்பிடித்துள்ளார்.

சண்டைக் காட்சிகளுக்கு ஒராசமாவின் மெனக்கிடல் படத்தில் பிரதிபலிக்கிறது. அதிகப்படியான ரத்தம் மற்றும் கிராஃபிக் வன்முறை காட்சிகளை காத்திரம் குறையாமல் காட்டியிருக்கிறார்.

பின்னணி இசை:

அட்டாமி கோர்பி ஒரு வார்த்தை கூட பேசாததால், கதைப் பின்னணியின் தீவிரத்தையும், அவரது உணர்ச்சியையும் பார்வையாளருக்கு யாரிட் கிளிஞ்சர் உடைய அழுத்தமான பின்னணி இசை வெற்றிகரமாக கடத்தியுள்ளது.

ரேட்டிங் : 4 / 5                                                               

Sisu : Road to Revenge                                                                                                                                               

வெளியீடு -November 21st 2025

நிறுவனம் -Sony Pictures

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *