சிவகார்த்திகேயனுக்கு நீண்ட காலமாக கைகொடுக்காமல் இருந்த மாஸ் ஆக்ஷன் அவதாரம் இந்த படத்தில் கைகொடுத்திருக்கிறது. மனுஷன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் பயங்கரவாத கும்பல் ஒன்று, மிகப்பெரிய அளவிலான ஆயுதங்களை விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. இதனை தடுக்கும் முயற்சியில் பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபடுகிறது. இதற்கிடையே, காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்துகொள்ள போவதாக சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து, பயங்கரவாத கும்பலின் திட்டத்தை முறியடிக்க பிஜு மேனன் முடிவு செய்கிறார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சுமார் 15 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது. அவர் நினைத்தது போல் சிவகார்த்திகேயன் மூலம் பயங்கரவாத கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டதா ? , அவர் மனநிலை பாதிக்கப்பட்டது ஏன் ? அவரது காதலி அவரை பிரிந்து சென்றது ஏன் ? ஆகிய கேள்விகளுக்கான விடையை ஆக்ஷன் ஜானரில் சொல்வதே ‘மதராஸி’.
அவர் குறிப்பாக கேஸ் தொழிற்சாலையில் நடைபெறும் சண்டைக்காட்சியும், கிளைமாக்ஸில் வில்லன் உடனான ஆக்ஷன் காட்சியும் மிரட்டல். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி செண்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்துகிறார். அம்மா போன் செய்தது போல் நடிக்கும் காட்சியில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், ஆரம்பத்தில் திரைக்கதையில் இருந்து விலகியிருந்தாலும், இரண்டாம் பாதி படத்தில் அவர் இல்லை என்றால் படம் இல்லை, என்ற அளவுக்கு திரைக்கதையோடு பயணித்து பார்வையாளர்களை கவர்கிறார்.
துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் சூப்பர் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் வித்யூத் ஜமால், “யார் கிட்ட வேண்டுமானாலும் துப்பாக்கி இருக்கலாம், ஆனால் நான் தான் வில்லன்” என்று பஞ்ச் வசனம் பேசிக்கொண்டு ஹாலிவுட் நடிகரைப் போல் ஆக்ஷனில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் சபீர் கல்லரக்கல், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக நடித்திருக்கும் பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோர் பார்வையாளர்கள் மனதில் பதிந்துவிடும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அனிருத், படத்தின் டைடில் கார்டிலேயே பார்வையாளர்களை தன் பின்னணி இசையால் நிமிர்ந்து உட்கார வைத்துவிடுவதோடு, தனது பீஜியம் மூலம் காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறார். ஏற்கனவே முனுமுனுக்க வைத்திருக்கும் பாடல்கள் காட்சிகளோடு பார்க்கும் போது புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுதீப் இளமோன், படம் முழுவதையும் பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். சண்டைக்காட்சிகளின் வேகம் மற்றும் பிரேம்கள் மூலம் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கும் சுதீப் இளமோன், படம் முழுவதையும் ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், இரண்டரை மணிக்கும் மேலான நீளம் இருந்தாலும், அனைத்து காட்சிகளையும் ரசிக்கும்படி நேர்த்தியாக காட்சிகளை தொகுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சியான கண்டெய்னர் சேசிங், அதன் பிறகு ஹீரோவின் அறிமுகம், அவரது காதல், மனநலம் பாதிப்பு என அனைத்து விசயங்களையும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தொகுத்திருப்பவர், சண்டைக்காட்சிகளை படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதத்தில் தொகுத்திருக்கிறார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் தன்னை நிரூபித்துவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு துப்பாக்கியை வைத்து மிகப்பெரிய சமூக பிரச்சனையை பேசியிருப்பதோடு, அதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஆக்ஷன் கமர்ஷியல் விருந்து கொடுத்திருக்கிறார். எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்பு தமிழகத்தில் வரக்கூடாது, என்ற அவரது எச்சரிக்கையும், அதனை மையப்படுத்திய திரைக்கதையும் படம் முழுவதையும் தொய்வின்றி நகர்த்தி செல்கிறது.
சிவகார்த்திகேயனை ஆக்ஷன் மாஸ் ஹீரோவாக மிக கச்சிதமாக கையாண்டிருப்பவர், அவரது பேவரைட் காதல், எமோஷனல் ஆகியவற்றையும் சரியான அளவில் சேர்த்துஅனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான படமாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தை மிக பலம் வாய்ந்ததாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், காதல் ஒரு சாமானியனையும் சாகசங்கள் நிகழ்த்தும் நாயகனாக உருவாக்கும் என்பதை மேலோட்டமாக சொல்லி காதலர்களையும் படத்தை கொண்டாட வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், ‘மதராஸி’ சிவகார்த்திகேயனை மாஸாக்கி விட்டது.