வேஃபேரர் பிலிம்ஸ் தயாரித்து ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியீட்டில் வந்திருக்கும் லோகா அத்தியாயம் ஒன்று சந்திரா படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் டொமினிக் அருண். லோகா – அத்தியாயம் ஒன்று சந்திரா சிலிர்ப்பூட்டும் வித்தியாசமான கற்பனை கலந்த த்ரில்லிங் அனுபவம் ரசிகர்களுக்கு வைபவம்.
இதில் சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன், சன்னியாக (நஸ்லென் கே கஃபூர்), வேணுவாக சந்து சலீம்குமார், நைஜிலாக அருண் குரியன், நாச்சியப்ப கவுடாவாக சாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி, எடிட்டர் : சாமன் சக்கோ, இசை : ஜேக்ஸ் பிஜாய், தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களான, நிர்வாக தயாரிப்பாளர் : ஜோம் வர்கீஸ், ஸ்டண்ட் : யானிக் பென், கலை : ஜித்து செபாஸ்டியன், ஒப்பனை : ரோனெக்ஸ் சேவியர், ஆடை வடிவமைப்பாளர்கள் : மெல்வி ஜே, அர்ச்சனா ராவ், பிற மொழி டப்பிங் இயக்குநர் : ஆர்.பி. பாலா (ஆர்.பி. ஸ்டுடியோஸ்), ஒலி வடிவமைப்பு : டான் வின்சென்ட், ஒலி கலவை : ராஜகிருஷ்ணன், பாடலாசிரியர் : சசிகுமார், முரி, ஜெபா டாமி, கெஸ்ட் கம்போசர்ஸ்; : டி.ஜே.சேகர், ஜே.கே, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : வினோஷ் கைமல், ரின்னி திவாகர், தலைமை இணை இயக்குநர் – சுஜித் சுரேஷ், டிஐ வண்ணக்கலைஞர் – யாஷிகா ரௌத்ரே, டிஐ ஸ்டுடியோ – கலர் பிளானட் ஸ்டுடியோஸ், விஷ{வல் எஃபெக்ட்ஸ் – லிட்டில் ஹிப்போ ஸ்டுடியோஸ் – பிக்டோரியல் எஃப்எக்ஸ், அனிமேஷன் – யூனோயன்ஸ் ஸ்டுடியோ, மக்கள் தொடர்பு : நிகில்முருகன்
சந்திரா (கல்யாணி பிரியதர்ஷன்) 20 ஆண்டுகள் ஸ்வீடனில் வசித்து வந்த பிறகு பெங்க@ருக்கு புதிதாக குடி பெயர்கிறார். வெயிலின் தாக்கம் பட்டால் அவரது சருமம் பொசுங்கி விடும் அளவிற்கு புண்ணாகும். அதனால் இரவில் மட்டுமே வெளியே வரும் சந்திரா ஒரு ஓட்டலில் வேலை செய்து சாதாரண வாழ்க்கை வாழ்கிறார். சன்னி (நஸ்லென்) ஏன்ற இளைஞனும் அவரது நண்பர்கள் வேணு (சந்து சலீம்குமார்) மற்றும் நைஜி (அருண் குரியன்) சந்திராவின் பிளாட்டுக்கு எதிரே வசிக்கிறார்கள். வேலை செய்யாமல் நண்பர்கள் குழு எப்பொழுதும் குடியும் கும்மாலுமாக பார்ட்டி செய்து பொழுதை கழிக்கின்றனர். சன்னி தற்செயலாக சந்திராவை பார்த்து பிடித்து போக, அவளுடன் பழக முற்படுகிறான். முதலில் தயங்கும் சந்திரா பின்னர் சன்னியுடன் பழகுகிறாள். இந்த சமயத்தில் நகரில் தனியாக செல்லும் மக்களை குறிவைத்து மயக்க ஊசி போட்டு உடல் பாகங்களை திருடும் கும்பல் நடமாட்டம் அதிகரிக்கிறது. இதற்கு உடந்தையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்ப கவுடா (சாண்டி) இருக்கிறார். கடத்தல் கும்பலிடமிருந்து சண்டையிட்டு ஒரு பெண்ணை மீட்கிறாள் சந்திரா. இதனால் நாச்சியப்ப கவுடா சந்திராவை கொல்ல சதி திட்டம் தீட்டுகிறான். இந்நிலையில் சன்னி சந்திராவின் நடவடிக்கைகளின் மேல் சந்தேகப்பட்டு கண்காணிக்க தொடங்க, திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. சந்திரா பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடி மலைவாசியான கல்லியங்காட்டு நீலி என்பதும், மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் பெண் இயங்றை ஆவி யக்ஷி என்பதும், தீயவர்களை அழிக்க வந்த பாதுகாவலர் சூப்பர் பவர் நிறைந்தவர் என்பதை தெரிந்து கொள்ளும் சன்னி வெளவெளத்து போகிறான். சந்திராவிடமிருந்து விலக நினைக்கும் போது அவளை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட, வேறு வழியில்லாமல் சந்திராவுடன் பயத்துடன் பயணிக்கிறான். போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்ப கவுடா சந்திராவை கண்காணிக்க தொடங்கி பின் தொடர்ந்து வீட்டிற்குவந்து விட, அவனிடம் சண்டைபோடும் சந்திரா நாச்சியப்பாவின் கையை கடித்து விடுகிறாள். அங்கிருந்து வெளியேறும் நாச்சியப்பா கவுடா தன் உடல் நிலையில் மாற்றத்தை உணர்கிறார். சந்திரா நாச்சியப்பா கவுடாவால் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் போது சன்னி மற்றும் நண்பர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் உயிரோடு தப்பித்தார்களா? நாச்சியப்பா சந்திராவிற்கு எதிராக பெரிய தீய சக்தியாக உருவாகி என்ன செய்தார்? சந்திராவால் அதை முறியடிக்க முடிந்ததா? சந்திராவின் கடந்த கால ரகசியங்களால் நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன் தீர்க்கமான பார்வை அமைதியான சுபாவம், அதிர்ந்து போசாத குணம், ஆனால் அமானுஷ்ய சக்திகள் நிரம்பிய சூப்பர் வுமனாக தன்னுடைய நடை, உடை, பாவனையில் கச்சிதமாக பொருந்தி அசத்தலாக நடித்துள்ளார். நீலியாக, யக்ஷியாக, பரந்து பரந்து மின்னல் வேகத்தில் சண்டை போடும் காட்சிகள், ரத்தம் குடிக்க விகார பல்லுடன் தோன்றும் போதும், நஸ்லேனுடன் பழகும் விதம், கடந்த காலத்தின் சுவடுகள் என்று அவரின் அவதாரங்கள் திகைப்பூட்டி ரசிக்க வைத்துள்ளது.
சன்னியாக நஸ்லென் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள், சந்திராவிடம் பயத்துடன் பழகும் விதம், பின்னர் உதவிகள் செய்து பிரியும் போது உணர்ச்சிகள் நிறைந்த நடிப்பை நிறைவாக செய்துள்ளார். சாண்டி மாஸ்டர் போலீஸ் அதிகாரி நாச்சியப்ப கவுடாவாக மிரட்டும் கண்களுடன், வெறுப்பை சம்பாதிக்கும் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பில் கவனிக்க வைத்துள்ளார்.
நஸ்லென் நண்பர்களாக தோன்றிய சந்து சலீம் குமார் மற்றும் அருண் குரியன் மற்றும் பலர் படத்திற்கான பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி பெங்க@ரின் அழகை இரவின் கண்ணோட்டத்துடன் காட்சியப்படுத்திய விதம், வீடுகளின் அமைப்பு, அபார்ட்மெண்டில் நடக்கும் சண்டை காட்சிகள், ஃபிளாஷ்பேக் காட்சிகளின் பிரமிப்பு, பறக்கும் சக்தி ஒவ்வொரு காட்சியையும் திரையின் எல்லைகளுக்கு அப்பால் பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை கண் முன் நிறுத்தி மிரட்சி ஏற்படும் வண்ணம் சிலிர்ப்புடன் கொடுத்துள்ளார்.
ஜேக்ஸ் பிஜாயின் நம்பமுடியாத அதிசய உணர்வை ஏற்படுத்தும் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். எடிட்டர் சாமன் சாகோ காட்சிகளுக்கு தனித்துவத்தை கொண்டுவந்து அற்புதமான வழிகளில் அதிசயங்களைச் செய்து தாளம், வேகக்கட்டுப்பாடு, லைட்டிங் வடிவங்கள் அனைத்தும் நன்கு சிந்திக்கப்பட்டு ஒவ்வொரு தருணத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டு கச்சிதமாக தொகுத்து கொடுத்துள்ளார்.
ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென்னின் சண்டைக்காட்சிகள், கலை இயக்குநர் பங்கலானின் உழைப்பு, வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் என்று இயக்குனர் டொமினிக் சமரசம் செய்யாமல் பிரமாண்ட படைப்பாக தத்ரூப காட்சிகளுடன் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
மலையாளம் சினிமா சமீபத்திய ஆண்டுகளில் தயாரித்த மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் லோகா தனித்து நிற்கிறது. பிரமாண்டமான தயாரிப்பு வடிவமைப்பு, மெதுவாக செல்லும் காட்சிகள் என்றாலும் திரைக்கதையில் நுட்பமான பணியை மேற்கொண்டிருக்கிறது டாமினிக் அருண் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் கூட்டணி. அமானுஷ்யம் நிறைந்த சூப்பர் உமனின் வாழ்க்கையில் குறிக்கிடும் மூன்று இளைஞர்கள் மற்றும் பழி வாங்க நினைக்கும் எதிரிகளின் பிடியிலிருந்து தப்பித்து பிரச்னைகளை சமாளித்து முன்னேறும் அபூர்வ சக்தியாக கற்பனை வளத்துடன் வித்தியாசமான திரைக்கதையமைத்து ஃபிளாஷ்பேக் நாட்டுப்புற கதைகளுடன் இணைத்து விஎஃப் காட்சிகளுடன் புதிய ஆச்சர்யங்கள், மர்மங்கள் நிறைந்த பிரம்மாண்ட படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் டொமினிக். இந்திரைப்படத்தில் வரும் சில காட்சிகளின் தேடலுக்கு பதில் அடுத்த சினிமாடிக் யூனிவர்ஸில் வெளிப்படுத்தும் விதத்தில் முடித்துள்ளார் இயக்குனர் டொமினிக் அருண்.
மொத்தத்தில் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் லோகா – அத்தியாயம் ஒன்று சந்திரா சிலிர்ப்பூட்டும் வித்தியாசமான கற்பனை கலந்த த்ரில்லிங் அனுபவம் ரசிகர்களுக்கு வைபவம்.
