நாயகன் ஷேன் நிகாம், புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்து சென்னையில் வேலை செய்து வருகிறார். சென்னையில் நாயகி நிஹாரிக்காவை காதலித்து வரும் இவர், புதுக்கோட்டையில் தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்து நிஹாரிகாவை அங்கு வரவழைக்கிறார். திருமணம் நாளை நடைபெற இருக்கும் நிலையில், வீட்டிற்கு தெரியாமல் நிஹாரிகாவை சந்திக்க காரில் செல்கிறார். செல்லும் வழியில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஐஸ்வர்ய தத்தாவை காரில் இடித்து விடுகிறார். இதனால் ஊர் மக்கள் அனைவரும் ஷேன் நிகாமை அடித்து பிடித்து வைக்கிறார்கள். இந்த விபத்தில் ஐஸ்வர்யா தத்தாவின் குழந்தை இறந்து போகிறது. இதனால் கோபமடையும் ஐஸ்வர்யா தத்தாவின் கணவர் கலையரசன் மற்றும் அவருடைய அண்ணன் இருவரும் ஷேன் நிகாமை கொலை செய்ய நினைக்கிறார்கள். இறுதியில் ஷேன் நிகாமை, கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தாத்தாவின் அண்ணன் இருவரும் கொலை செய்தார்களா? ஷேன் நிகாம் திருமணம் நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஷேன் நிகாம், துறுதுறு இளைஞனாக நடித்து கவர்ந்திருக்கிறார். காதல், திருமணம் என கலகலப்பாகவும், சண்டை, ஜெயில், வருத்தம் என உணர்வுபூர்வமாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் நிஹாரிகா சில காட்சிகளே வந்தாலும் கதாபாத்திரத்திற்கு அழுத்தம் சேர்த்து உள்ளார். கலையரசனுக்கு முக்கியமான கதாபாத்திரம். அவரும் உணர்ந்து நடித்து இருக்கிறார். கணவனாகவும் ரவுடியாகவும் நடித்து பாராட்டை பெற்று இருக்கிறார். இவரது மனைவியாக வரும் ஐஸ்வர்யா தத்தா, வசனமே இன்றி கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாஸ்.
ஒரு விபத்தால் நாயகனின் வாழ்க்கை மாறுவதை கதையாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வாலி மோகன் தாஸ். முதல் பாதி விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி மெதுவாகவும் திரைக்கதை நகர்கிறது. ஆங்காங்கே திரைக்கதையில் சறுக்கல் இருப்பது பலவீனம். கதைக்கும் படத்தின் தலைப்புக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது. சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக காதல் சடுகுடு ரீமேக் பாடல் ரசிக்க வைக்கிறது. பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவு கச்சிதம்.