சென்னை, திருமுல்லைவாயில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றின் ஒரு இளம் பெண்னை கொலை செய்து பில்லரில் வைத்து மறைத்துள்ளார்கள். அந்தப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவரின் மகள் அபி நட்சத்திரா தான் கொல்லப்பட்ட பெண் என்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரை யார் எதற்காகக் கொன்றார்கள் என்ற விசாரணையை ஆரம்பிக்கிறார். அவருக்கு உதவியாக பெண் சப் இன்ஸ்பெக்டர் ரச்சிதா மகாலட்சுமியும் இருக்கிறார். இவர்கள் கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இப்படியான பல கதைகளை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால், அந்த விசாரணையை திரைக்கதையாக எப்படி விறுவிறுப்பாகச் சொல்கிறார்கள் என்பதில்தான் அந்தப் படத்தின் வரவேற்பு அடங்கியிருக்கும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸை கடைசி வரை நாம் யூகிக்க முடியாதபடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. இதில் அபி நட்சத்திரா கொலைதான் படத்தின் மையக் கதை என்றாலும், சுற்றி சில கதாபாத்திரங்களை வைத்து அவற்றிற்கும் சில கதைகளைச் சொல்லி மையக்கதையுடன் இணைத்திருக்கிறார்கள். அதில் அனந்த்நாக் – அம்ரிதா ஹால்டர் காதல் கதை, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் குடும்பப் பிரச்சனை எனவும் திரைக்கதை சேர்ந்து வருகிறது. காதலும், குடும்பமும் எவ்வாறு இருக்க வேண்டும் என இந்த த்ரில்லர் கதையிலும் கொஞ்சம் அட்வைஸ் செய்திருக்கிறார் இயக்குனர்.
நாயகன் ராஜ்குமார் நாகராஜ், அவரே கதாநாயகனாக நடித்து, இப்படத்தையும் தயாரித்துள்ளார். பொதுவாக, கதாநாயகனாக நடிப்பதற்காக படங்களைத் தயாரிப்பவர்கள் மிகச் சுமாராக நடிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். யதார்த்த வாழ்க்கையில் இன்ஸ்பெக்டர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவருடைய அளவு மீறிய கோபத்திற்கும் ஒரு பிளாஷ்பேக் வைத்திருக்கிறார் இயக்குனர். சப் இன்ஸ்பெக்டராக ரச்சிதா மகாலட்சுமி. ‘சரவணன் மீனாட்சி’ டிவி சீரியலில் பார்த்தவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். போலீஸ் வேடம் அவருக்கும் பொருத்தமாக இருக்கிறது. படத்தில் கிளாமரான கதாபாத்திரம் ஒன்று இருக்க வேண்டும் என அம்ரிதா ஹால்டர் கதாபாத்திரத்தை வைத்துள்ளார்கள். அவரது காதலராக அனந்த் நாக் நடித்துள்ளார். அப்பாவி இளம் பெண் வேடமாக கூப்பிடுங்கள் அபி நட்சத்திராவை என்றாகிவிட்டது. இருந்தாலும் அம்மாதிரியான கதாபாத்திரங்களில் அப்பாவித்தனமாக நடித்து பேர் வாங்கிவிடுகிறார்.
சென்னை, திருமுல்லைவாயில் பகுதிதான் கதைக்களம். அந்த யதார்த்தத்துடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் டிஜே பாலா. ராஜ் பிரதாப் பின்னணி இசை பரவாயில்லை. படத்தின் மேக்கிங்கில் இன்னும் தரத்தைக் கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாடகத்தனமான சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். பாலியல் வன்கொடுமை பற்றிய படம். வயது வித்தியாசம் இல்லாமல் பல ஆண்கள் இப்படியான வன்கொடுமையில் ஈடுபடுகிறார்கள். அவர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார் இயக்குனர்.