நாயகன் உபேந்திரா நல்லவர்களை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து வருகிறார். மற்றொருவர் செய்த தவறுக்காக, தான் ஏற்றுக் கொண்ட தண்டனையால் பெரும் அளவிற்கு நல்லவராக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மற்றொரு உபேந்திரா நல்லது செய்யும் உபேந்திராவை அடைத்து வைத்துவிட்டு மக்களுக்கு கெட்டது செய்கிறார். இறுதியில் நல்ல உள்ளம் கொண்ட உபேந்திரா தப்பித்தாரா? கெட்டது செய்யும் உபேந்திரா யார்? எதற்காக மக்களுக்கு கெட்டது செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் உபேந்திரா, நல்லவன், கெட்டவன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். நல்லவன் சாந்தமாகவும், கெட்டவன் அடிதடி, சண்டை, என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ரேஷ்மா நானையா, உபேந்திராவை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த கதாபாத்திரம் வெகுளியாகவும், கோமாளித்தனமாகவும் அமைந்துள்ளது. ஆனாலும் இவரது கதாபாத்திரம் கதைக்கு ஒட்டவே இல்லை. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
நாம் கலியுலகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் உபேந்திரா. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் போனது வருத்தம். நடிப்பில் கவனம் செலுத்திய உபேந்திரா, கொஞ்சம் கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். வித்தியாசமான முயற்சிதான் என்றாலும் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. அஜனிஸ் லோக்னாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. வேணு கோபாலின் கேமரா கலர்புல், கருப்பு என்று மாறி மாறி படம் பிடித்து இருக்கிறது. இப்படத்தை லஹரி பிலிம்ஸ் மற்றும் வீனஸ் இன்டெர்ட்டைநேர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.