நாயகன் சிவா, தனது அடியாட்களுடன் சேர்ந்து ஆள் கடத்தல் செய்து பணம் சம்பாதித்து வருகிறார். அதே சமயம் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரன் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டம் போடுகிறார். அதற்காக வங்கியில் இருந்து ஒரு கருவியை வாங்கி வைத்துக் கொள்கிறார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக கருணாகரன், சிவா மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்படுகிறார். பணம் அனுப்பும் கருவியும் தொலைந்து போகிறது. சிவா மற்றும் கருணாகரனை பிடிக்க போலீஸ் தேடுகிறது. பணத்தை அபகரிக்கவும் ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. இறுதியில் பணம் அனுப்பும் கருவி கிடைத்ததா? சிவா, கருணாகரன் இருவரும் சேர்ந்து போலீசிடம் இருந்து தப்பித்தார்களா? கருணாகரனிடம் இருக்கும் பணம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவா, தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ஹரிஷா கண்ணுக்கு தெரியாத பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். அமைச்சராக நடித்து இருக்கும் கருணாகரன், நக்கல் கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவாவுடன் பயணிக்கும் கல்கி ராஜா மற்றும் கவி ஆகியோர் படம் முழுக்க பயணித்து ஆங்காங்கே ரசிக்க வைத்து இருக்கிறார்கள். ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கராத்தே கார்த்தி, அருள்தாஸ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். கடத்தல், அரசியல் பணம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன். காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. சூதுகவ்வும் முதல் பாகத்துடன் இதை இணைத்து படமாக்கி இருக்கிறார்கள். ஆனால், சரியாக கனெக்ட் ஆகவில்லை. முதல் பாகம் அளவிற்கு சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம். நிகழ்கால அரசியல் காட்சிகள், வசனங்கள் வைத்திருப்பது படத்திற்கு பலம் சேர்ந்து இருக்கிறது.
எட்வின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஹரியின் பின்னணி இசை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. கார்த்திக்கின் ஒளிப்பதிவு கலர்புல்லாக அமைந்துள்ளது.திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.