தமிழ் சினிமாவில் காதல் கதைகளைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. இருக்கும் கதாநாயக நடிகர்கள் பலருக்கும் ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பதில் மட்டும்தான் ஆர்வம் அதிகம் இருக்கிறது. அதனால், மென்மையான காதல் கதைகளைப் பார்க்கவே முடிவதில்லை. இப்படம் அப்படியான குறையை ஓரளவிற்குத் தீர்த்து வைக்கிறது.
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர் சித்தார்த். காரில் சென்ற போது அவருக்கு ஏற்பட்ட விபத்தால் கடந்த இரண்டு வருடங்களில் அவருடைய நினைவுகள் மறந்து போகிறது. திடீர் நண்பரான கருணாகரனுடன் பெங்களூரு செல்கிறார். அங்கு ஆஷிகா ரங்கநாத்தைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். அவரைத் தனக்கு திருமணம் செய்து வைக்க அம்மாவிடம் வந்து கேட்கிறார். ஆஷிகாவின் புகைப்படத்தைப் பார்த்தும் அம்மாவுக்கு அதிர்ச்சி. ஆஷிகாதான் சித்தார்த்தின் மனைவி என்ற உண்மையைச் சொல்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நினைவுகள் மறந்து போகும் கதாநாயகன் அல்லது கதாநாயகி என தமிழ் சினிமாவில் அவ்வப்போது படங்கள் வந்ததுண்டு. அந்த வரிசையில் மற்றுமொரு படம். காதல், குடும்பம், சென்டிமென்ட், நகைச்சுவை என முடிந்தவரை படத்தை சுவாரசியமாக நகர்த்திச் செல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்.
எவ்வளவு வயதானலும் காதல் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கான இளமையுடனேயே இருக்கிறார் சித்தார்த். இரண்டு வருட நினைவுகள் மறந்து போன ஒரு கதாபாத்திரம். இந்தப் படத்தில் நடிக்கும் போது நிஜ வாழ்க்கையிலும் காதலித்துக் கொண்டுதான் இருந்திருப்பால். அதனால், நடிப்பும் இயல்பாகவே இருக்கிறது.
அமைதியாக, எதையோ பறிகொடுத்த உணர்வுடன்தான் ஆஷிகாவின் அறிமுகம் படத்தில் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது பின்னால் தெரிய வரும் போது அவர் கதாபாத்திரம் மீது அனுதாபம் வந்துவிடுகிறது. திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என அவரது நடிப்பில் உள்ள மெச்சூரிட்டிக்கான வித்தியாசம் நிறைவாய் அமைந்துள்ளது.
சித்தார்த் நண்பர்களாக கருணாகரன், பாலசரவணன், மாறன். இவர்களில் அவருடன் அதிக நேரம் இருப்பவராக கருணாகரன் தான் இருக்கிறார். மற்ற இருவரைக் காட்டிலும் கருணாகரனின் சில டைமிங் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. சித்தார்த் அம்மாவாக அனுபமா குமார். அப்பா ஜெயப்பிரகாஷ் திடீரென வருகிறார், திடீரென காணாமல் போகிறார். ஆஷிகாவின் அப்பாவாக பொன்வண்ணன்.
இம்மாதிரியான படங்களுக்கு பாடல்கள்தான் பக்கபலமாக இருக்க வேண்டும். அதில் ஏமாற்றத்தைத் தந்தாலும், பின்னணி இசையில் ஏமாற்றத்தைத் தரவில்லை ஜிப்ரான். கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு சென்னையை விடவும் பெங்களூருவை அழகாய் காட்டுகிறது.
படத்தில் அமைச்சர் கதாபாத்திரம், அதைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் பழைய பார்முலாவாக உள்ளது. மேலோட்டமாய் நகர்ந்து போகும் உணர்வே ஏற்படுகிறது. இன்னும் சில அழுத்தமான, உணர்வுபூர்வமான காட்சிகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.