Mon. May 5th, 2025
Spread the love


அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. சினிமாவில் நடிக்கும் ஆசை கொண்ட ஐஸ்வர்யா, 10 ஆண்டுகளுக்கு முன்பு 'பட்டத்துயானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெறாமல் போகவே வேறு வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றினார். அதன் பிறகு மகளின் நடிப்பு ஆசையை நிறைவேற்ற 'சொல்லிவிடவா' என்ற படத்தை அர்ஜூன் இயக்கினார். இந்த படம் 'பிரேம பரஹா' என்ற பெயரில் கன்னடத்திலும் வெளிவந்தது.

அதன்பிறகும் ஐஸ்வர்யாவுக்கு படங்கள் அமையவில்லை. இதற்கிடையில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது திருமணத்திற்கு பிறகும் மீண்டும் நடிக்க வருகிறார். அவரது தந்தை அர்ஜூனே மகளை மீண்டும் இயக்குகிறார். ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்துவதற்காக ஒரு படத்தை இயக்க இருந்தார். அதில் நாயகனாக விஷ்வக் சென் நடிக்க ஒப்பந்தமானார். அர்ஜுனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விஷ்வக் சென் விலகினார்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 'சீதா பயணம்' என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா அர்ஜூன் சீதாவாக நடிக்கிறார். கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் நாயகனாக நடிக்கிறார். இதை அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் ஐஸ்வர்யாவுக்கு நல்லதொரு ரீ என்ட்ரியை கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *