தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் திருநங்கையரை ஒரு கேலிக்குரிய மனிதர்களாக மட்டுமே சித்தரிக்கும் மனோபாவம் இருந்தது. கடந்த சில வருடங்களில் அப்படியான சித்தரிப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டது. திருநங்கையரை ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் இருக்கும்படியான படங்கள் அதிகம் வந்ததில்லை. சிறிய கதாபாத்திரங்களாக கொஞ்ச நேரமே இடம் பெறும்படி மட்டுமே சில படங்கள் வந்துள்ளன.
இந்த நீல நிறச் சூரியன் படத்தில் முழுநீள கதாபாத்திரமாக முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து படத்தை இணைந்து தயாரித்து, இயக்கி நடித்தும் உள்ளார் திருநங்கை சம்யுக்தா விஜயன்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான கதை. அரவிந்த் என்ற இளைஞனாக வீட்டிற்கு ஒரே மகனாக, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் சம்யுக்தா விஜயன். அவருக்கு சிறு வயதிலிருந்தே பெண்ணாக மாற வேண்டும் என்பது ஆசை. பெற்றோருக்குத் தெரியாமல் அதற்கான மருத்துவ சிகிச்சையையும் மேற் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய ஆசையை பள்ளியிலும் வீட்டிலும் தெரிவிக்கிறார். இரண்டு இடத்திலும் எதிர்ப்பு வந்தாலும் தன்னை பெண்ணாக மாற்றி பானுஎன்ற பெயரையும் வைத்துக் கொள்கிறார். பேண்ட், சட்டை அணிந்து பள்ளிக்கு வேலைக்குச் சென்று வந்தவர் திடீரென சேலை அணிந்து பெண்ணாக வேலைக்குச் செல்கிறார். அதனால், பள்ளியிலும், வீட்டிலும் சில சிக்கல்களை எதிர்கொள்கிறார். அதை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஆரம்பத்தில் அரவிந்த்& என்ற ஆணாகவும், பின்னர் பானு என்ற பெண்ணாகவும் இரண்டு கதாபாத்திரத்திலும் யதார்த்தமாக நடித்திருக்கிறார் சம்யுக்தா விஜயன். அவரும் ஒரு திருநங்கை என்பதால் அந்தக் கதாபாத்திரங்களை அவ்வளவு இயல்பாய் உள்வாங்கி நடித்திருக்கிறார். ஆணாக இருக்கும் போது ஏற்படும் உணர்வுகளையும், பெண்ணாக மாறிய பின் ஏற்படும் தவிப்புகளை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு. அவருக்குள்ளும் ஒரு காதல் வர, ஆனால், அவர் நேசித்தவர் இவரை உணர்வு ரீதியாகப் புரிந்து கொள்ளாமல் உடல் ரீதியாக உறவு கொள்ள ஆசை என்று சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார். கிளைமாக்சில் உண்மைக்கு மாறாக பேச வேண்டிய ஒரு சூழலில் கலங்கி நிற்கும் போது நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.
உணர்வு ரீதியாக சிக்கல்களை எதிர்நோக்கும் இவர்களுக்கு சரியான உறுதுணையும், ஆதரவும் தேவை. அப்படி ஒருவராக சக ஆசிரியையாக ஹரிதா மிகவும் பக்கபலமாக நடித்திருக்கிறார். சம்யுக்தாவின் பெற்றோராக கஜராஜ், கீதா கைலாசம், சித்தப்பாவாக பிரசன்னா பாலசந்திரன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாய் நடித்திருக்கிறார்கள். பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள், குடும்பத்தினர், மாணவர்கள் என சில காட்சிகளில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கூட அவர்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து பாராட்ட வைக்கிறார்கள்.
படத்தில் குறிப்பிட வேண்டியது அதன் உருவாக்கம். ஒரு தரமான, மேன்மைத்தனமான உருவாக்கமாக உள்ளது பாராட்ட வேண்டிய ஒன்று. குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சிகளுக்கான லைட்டிங்கும் கதாபாத்திரங்களுடன் ஒன்றக் கூடிய ஒரு வித உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என மூன்றையும் ஒருவரே சிறப்பாகச் செய்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
படத்தில் குறைகள் என்று பெரிதாக சொல்ல முடியாத அளவிற்கு உருவாக்கியிருக்கிறார்கள். தேவையற்ற நீளம் இல்லாமல் தேவையான காட்சிகளுடன் சரியான ஒரு இடத்தில் படத்தை முடிவு பெற வைத்துள்ளார்கள். எத்தனையோ பேரின் உணர்வுகளைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திருநங்கையின் மனமாற்ற உணர்வு எப்படியிருக்கும் என்பதை உணர்த்தியுள்ள படம் இது.