நாயகன் நகுல் நல்ல மனம் கொண்டவராக இருக்கிறார். கலியுகத்தில் இவர் தங்குவதற்கு வீடு கிடைக்காமல் இருக்கிறது. இதனால் தன்னை கெட்டவனாக காண்பித்து வாழ்ந்து வருகிறார். நாயகியை திருமணம் செய்யும் நிலையில் இவரது நல்ல குணம் தெரிய வருகிறது. இதனால் இவரை நல்லவர்கள் வாழும் வாஸ்கோடகாமா என்னும் ஜெயிலில் அடைக்கிறார்கள். இதே ஊரில் பல கெட்ட காரியங்களை செய்து வரும் வம்சி கிருஷ்ணா, நல்லவனாக நடித்து வாஸ்கோடகாமா ஜெயிலுக்கு செல்கிறார். இறுதியில் நகுல் வாஸ்கோடகாமாவில் இருந்து வெளியே வந்து நாயகியை திருமணம் செய்தாரா? வம்சி கிருஷ்ணா வாஸ்கோடகாமாவிற்கு செல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நகுல் ஓவர் ஆக்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் அர்த்தனா பினுவுக்கு அதிகம் வேலை இல்லை. கே.எஸ்.ரவிகுமார் இரட்டை வேடத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நடித்து இருக்கிறார். ஆனந்தராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
கற்பனைக்கு எட்டாத கதையை கற்பனையாக உருவாக்கி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் என்.ஜி.கே. நல்ல கதை சொல்லத் தெரியாமல் தடுமாறி இருக்கிறார். காமெடி என்று நினைத்து பல காட்சிகள், வசனங்கள் வைத்திருக்கிறார். இதில் ஒரு இடத்தில் கூட சிரிக்க முடியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. நடிகர்களின் நடிப்பை வீணடித்து இருக்கிறார் இயக்குனர். முதல் பாதி என்ன நடக்கிறது என்று தெரியாமல் திரைக்கதை நகர்கிறது. இரண்டாம் பாதி வாஸ்கோடகாமா என்ற இடத்தில் புரியாமல் திரைக்கதை நகர்கிறது.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது. அருணின் இசையில் பாடல்கள் கவரவில்லை. தத்தோ பி. சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.