1943 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவில் சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது மீனவரான நாயகன் யோகி பாபு, ஆங்கிலேயர்களிடம் கைதியாக பிடிபட்டு இருக்கும் தனது தம்பியை காப்பாற்ற பாட்டியுடன் செல்கிறார். அப்போது ஜப்பான் நாடு சென்னையில் கடற்கரையோரம் உள்ள வெள்ளையர்களின் முகாமில் குண்டு வீசப்போகிறார்கள் என்ற தகவல் பரவுகிறது.மக்கள் பதற்றத்தில் தப்பியோடுகின்றனர். இதில் தம்பியை மீண்டும் போலீஸ் பிடித்துக் கொள்கிறது. யோகிபாபு, அவரது பாட்டியும், தான் கொண்டுவந்த போட்டில் ஏறிக் கொள்கிறார்கள். மேலும் இவர்களுடன் சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், சா ரா, கவுரி கிஷன், மதுமிதா மற்றும் அவரது மகன் ஏறிக் கொள்கிறார்கள். கடலுக்குள் சென்றால் தப்பித்து விடலாம் என்று போட்டை கடலுக்குள் கொண்டு செல்கிறார் யோகி பாபு. நடுவழியில் ஆங்கிலேய போலீஸ் அதிகாரியும் அந்த போட்டுக்கு செல்கிறார். அதிக எடை தாங்காத போட்டில் 10 பேரில் 7 பேர் மட்டுமே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.இறுதியில் அந்த போட்டில் இருப்பவர்கள் எப்படி தப்பித்தார்கள்? தனது தம்பியை யோகி பாபு காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்து இருக்கும் யோகி பாபு, மீனவர் குமரன் கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். இது என் ஊர், என் போட் என்று சொல்லும் போது தன் உரிமைக்காக போராடும் மனிதராக பிரதிபலித்து இருக்கிறார். இவருக்கு துணையாக வரும் பாட்டி வெகுளித்தனமான நடிப்பால் கவர்ந்து இருக்கிறார்.பிராமின் பெண்ணாக வரும் கவுரி கிஷன் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆச்சாரம் பற்றி பேசும் சின்னி ஜெயந்த், முகமது ஜின்னா பற்றி பேசும் சா ரா, எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஒரு போட்டை மட்டுமே மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன். அனைத்து கதாபாத்திரங்களையும் அதிகம் பேச வைத்து திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். அது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சில வசனங்கள் அழுத்தமான அரசியலாக இருந்தாலும் அது பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. படத்தில் ஒரு இடத்தில் போட் நின்று விடுகிறது. அதுபோல் திரைக்கதையும் நின்று விடுகிறது.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம்.சவாலான வேலையை சாமர்த்தியமாக கையாண்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். மாலி & மான்வி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.