Sat. Dec 21st, 2024
Spread the love

நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இவர் தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுவார். இவருக்கு பெரிய சேனலில் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு முயற்சி செய்து வருகிறார். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. இதனால் பல திருமண வரன்கள் நின்று போகிறது. இவருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் திருமணம் நடக்கிறது.

திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் குறட்டையால் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷுக்கு வேலை போகும் அளவிற்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து கேட்கிறார். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் விவாகரத்து தர மறுக்கிறார். இறுதியில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றாரா? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் வழக்கமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வாரம் வாரம் ஒரு படத்தை வெளியிட்டு வரும் ஜி.வி.பிரகாஷ் ஒரே மாதிரியான நடிப்பை கொடுப்பது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாயகியாக நடித்து இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருப்பது சிறப்பு. கணவருக்காக ஏங்குவது, தன் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார். காளி வெங்கட்டின் நடிப்பு படத்திற்கு பலம். அவரது மனைவியாக வரும் பிளாக் ஷீப் நந்தினி கவனிக்க வைத்து இருக்கிறார். ரோகிணி, தலைவாசல் விஜய், இளவரசு, கீதா கைலாசம் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

குறட்டை சத்தத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன். படம் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்றுவிட்ட இயக்குனர் அதை முடிக்க முடியாமல் திரைக்கதை வேறு எங்கையோ சென்ற உணர்வை கொடுத்து இருக்கிறார். கணவன் மனைவி இருவரும் இடையே வரும் பிரச்சனை அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு பாடல் மட்டுமே கேட்கும் படி உள்ளது. நடிப்பில் கவனம் செலுத்துவது போல் இசையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது. ஊட்டியின் அழகை அழகாக படம் பிடித்து இருக்கிறார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *