நாயகன் ராம் சென்னையில் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவர் உதவி இயக்குனராக பணி புரிந்தாலும் வருமானம் ஏதும் இல்லாததால் தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இந்நிலையில் நண்பர் ஒருவர் மூலம் போலியான மெசேஜை பொது மக்கள் அனைவருக்கும் அனுப்பும் விதத்தை தெரிந்து கொள்கிறார்.
இந்த போலியான மெசேஜை வைத்து இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். அதன்படி சுயேச்சை வேட்பாளராக நிற்கும் நமோ நாராயணாவிடம் பல கோடிக்கு இந்த டீல் குறித்து பேசுகிறார். அவரும் ஒப்புக்கொள்ள எதிர்க்கட்சி வேட்பாளர் ஒரு பெண்ணுடன் இருப்பது போல் சித்தரித்து போலியான வீடியோவை பரப்புகிறார்கள்.
இறுதியில் இந்த போலியான மெசேஜ் மூலம் நாயகன் ராம் பணம் சம்பாதித்தாரா? இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் மெசேஜ் மூலம் மாற்றம் ஏற்பட்டதா? சுயேச்சை வேட்பாளர் நமோ நாராயணன் சொன்னபடி ராமுக்கு பணம் கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராம் கதாபத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். பணம் இல்லாமல் வருந்துவது பணத்திற்காக போராடுவது என நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் உபசனா அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தனக்கே உரிய பாணியில் அனுபவம் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர். நமோ நாராயணா மற்றும் ராமின் நண்பர்களாக வருபவர்கள் கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
போலியாக மெசேஜ் மற்றும் அதன் பின்னணியில் நடக்கும் விஷயங்களை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மணி தாமோதரன். நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதுபோல் லாஜிக் மிரல்கள் தவிர்த்து இருக்கலாம். விஜய் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அதிகம் எடுபடவில்லை. இன்னும் கொஞ்சம் தரமாக ஒளிப்பதிவு செய்திருக்கலாம். ராயன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
.