நாயகன் ருத்ரா (மகேந்திரன்) பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார். ஒரு நாள் ஆசிரியர் மகேந்திரனை அடித்துவிடுவதால் வருத்தப்பட்டு, அதே ஏரியாவில் கேரேஜ் வைத்துக் கொண்டு அதில் போதை பொருள் விற்று வரும் ஆனந்திடம் (ஜி.எம்.சுந்தர்) சொல்லுகிறார். ஆனந்த் அந்த ஆசிரியரை தூக்கி வந்து அடிக்கிறார். அதிலிருந்து ஆனந்துடன் ருத்ராக்கு பழக்கம் ஏற்படுகிறது. அடிக்கடி அவரது கேரேஜ்க்கு சென்று வருகிறார். அதே ஊரில் பெரிய தாதாவுக்கு அடியாளாக இருக்கும் குரு (தாசரதி நரசிம்மன்), மது போதையில் ருத்ரா பைக்கை எட்டி உதைக்கிறார். இதைப் பார்த்த ருத்ரா, குருவை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் குரு, ருத்ராவை பழிவாங்க திட்டம் போடுகிறார். இறுதியில் குரு, ருத்ராவை பழி வாங்கினாரா? குருவிடமிருந்து ருத்ரா தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரன், காதல், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்திலும் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் அதிரா ராஜ் மற்றும் தீபா பாலு ஆகியோருக்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. கேரேஜ் ஓனராக வரும் ஜி.எம்.சுந்தர், சிறு வயது பசங்களை கூட வைத்துக் கொண்டு ஜாலியாக நடித்து இருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் தாசரதி நரசிம்மன். இவரது உடலமைப்பு, பார்க்கும் பார்வை பிளஸ் ஆக அமைந்து இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
ஒரு சாதாரண வாலிபர் நியாயமான கோபத்தால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன். இந்த கதை வைத்து பல படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இப்படத்தில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர். லாஜிக் மிரல்கள், மகேந்திரனின் பள்ளி பருவம், கல்லூரி, வாலிபர் என வித்தியாசம் காண்பிக்காமல் இயக்கியிருப்பது படத்திற்கு பலவீனம். பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவு சிறப்பு.