சாதாரணமான செக்கப் தான் என்ற கிளம்பிய செய்தி, பின்னர் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை என்றும், நான்கு மணிநேரம் நடந்த சிகிச்சையில் அவரது மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை கேரளாவில் இருந்து வந்திருந்த சிறப்பு மருத்துவர்கள் செய்துள்ளனர் என்றும் தகவல்கள் கிளம்பின.
இப்போது மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் `விடா முயற்சி’-யில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சின்னதாக ஒரு பிரேக் கிடைத்திருப்பதால் அஜித், சென்னையில்தான் இருக்கிறார். இந்நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகே பல்வேறு தகவல்கள் பரவின. இப்போது அஜித் எப்படியிருக்கிறார்? வீடு திரும்பி விட்டாரா என்பது குறித்து அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் பேசினோம். உண்மையை விளக்கி அவர் கூறியதாவது,
‘அஜித் சாரின் நண்பர் வெற்றி துரைசாமியின் திடீர் மறைவிற்குப் பின் தன்னை சார்ந்த அனைவரிடமும் அவர், ‘நீங்க எல்லோரும் முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஹெல்த் செக்கப் பண்ணுவது அவசியம்’ என சொல்லி வந்தார். அதன்படி அவரும் நியூரோ, இதயம் என முழு உடல்பரிசோதனை செய்து கொண்டார். அப்போதுதான் அவரது காதுக்கு கீழே உள்ள நரம்பில் சின்னதொரு வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. 20 நிமிட அறுவை சிகிச்சையில் அதனை சரிசெய்து விடலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். அஜித் சாரும் அதனை ஒத்தி வைக்காமல், ஆப்ரேஷனை உடனே பண்ணிடுங்க எனச் சொன்னதால், நேற்று அவருக்கு இந்த அறுவைசிகிச்சை நடந்தது. நேற்றே அவர் பொதுப் பிரிவுக்கு வந்துவிட்டார்.
இப்போது நலமுடன் இருக்கிறார். இன்று மாலையோ அல்லது நாளையோ அவர் வீடு திரும்புவார். ‘விடா முயற்சி’யில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. திட்டமிட்டபடி அஜித் சார் அந்த படப்பிடிப்புக்கு கிளம்புகிறார். மற்றபடி பரவி வரும் தகவல்கள் அனைத்திலும் உண்மை இல்லை.” என விளக்கம் அளித்துள்ளார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா.