Wed. Nov 20th, 2024
Spread the love

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் பிரசாந்த், பொதுமக்களுக்கு ஹெல்மெட்டை இலவசமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நெல்லைக்கு ஜாலியாக வந்தேன். வந்த இடத்தில் ஒரு சேவையை செய்து விட்டுச் செல்கிறேன். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று சொல்வார்கள். உயிர்க்கவசம் மட்டுமல்ல, குடும்பத்துக்கே அதுதான் கவசம். சாலை விபத்தினால் பலரின் உயிர் போகிறது. தலைக்கவசம் இல்லாததால் தான் உயிரிழப்பு அதிகரிக்கிறது. இதனால் இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை எடுத்துச் செல்லும் வகையில் என்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக நிறைய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். என்னைப் போன்ற நடிகர், பிரபலமானவர்கள் கூறும்போது மக்களிடம் எளிதாகச் சென்றடையும்.நடிகர் விஜய்யுடன் நடிக்கும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. நானும், சகோதரர் விஜய்யும் நடிக்கும் திரைப்படத்திற்கு மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது மட்டுமின்றி, மக்களை மகிழ்விப்பது மட்டுமின்றி, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் சூப்பர் என்று கூற வேண்டும் என்பதற்காக, இது போன்ற பிரமாண்டமான திரைப்படங்களை செய்து கொண்டிருக்கிறோம். தமிழில் மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பது, கல்லூரி வாசல் திரைப்படத்தில் இருந்து தொடங்கிவிட்டது.

தற்போது நான், சகோதரர் விஜய், பிரபுதேவா எல்லோரும் இணைந்து நடிக்கின்றோம். மிகவும் சந்தோஷமாக உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

திரைப்படத்துறையில் இருந்து எம்.ஜி.ஆர், என்.டி. ராமாராவ், விஜயகாந்த் போன்று, நடிகர் விஜய் அரசியலில் சாதிப்பாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பது நல்ல விஷயம். அதற்கான பதில் மக்கள்தான் சொல்வார்கள்.பிற துறையினர் அரசியலுக்கு வந்தால் எப்படி பார்ப்பீர்களோ, அதே போல் திரைத்துறையில் இருந்து வருபவர்களையும் பாருங்கள். மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பதற்கு ஹார்ட் வொர்க் உட்பட பல கமிட்மெண்ட் இருக்க வேண்டும். விஜய் சாரிடம் அது அதிகம் உள்ளது. எனக்கெல்லாம் அது ரொம்ப கஷ்டம், அதற்கு தைரியம் வேண்டும். தற்போது நான் ஒரு நடிகன், மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு வருவதை காலம்தான் முடிவு செய்யும். சாதாரண மனிதனாகவும் இருந்து மக்களுக்கு சேவை செய்யலாம். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் தற்போதைக்கு எனக்கு இல்லை. நடிகர் விஷால் கட்சி ஆரம்பித்தால், அதுவும் நல்ல விஷயம்தான் என்றார்.

ஜீன்ஸ் 2 திரைப்படத்தை நானும் எதிர்பார்க்கிறேன். சங்கர் சார் தான் முடிவு செய்ய வேண்டும். நல்ல கதை அமைந்தால் அடுத்து நடிப்பேன் என்றார். தொடர்ந்து, இன்னும் நடிகர்கள் திரைப்படம் வெளியாவதில் இடையூறு இருப்பதாக கூறப்படுவது பற்றிக் கேட்டதற்கு, நீங்கள் சொன்னதை நான் ஒரு செய்தியாக எடுத்துக் கொள்கிறேன். தான் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில், அதிகமான நட்சத்திரங்கள் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய முதல் படத்தில் எப்படி ஒரு புது நடிகனாக இருந்தேனோ, அதே போன்று இப்போதும் புது நடிகனாகத்தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நடிகை திரிஷா பற்றிய விமர்சனங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நடிகை என்பதை விட, அவர் முதலில் ஒரு பெண், நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். யாராக இருந்தாலும் அப்படி பேசியது மிகவும் தவறு. நாம் யாரையும் குறைத்தோ, தவறாகவோ பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *