அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற ராஜ கிரீடம் கோயில் திருவிழாவின் போது மட்டுமே மக்களுக்குக் காட்டப்படும். அதே நேரம் மாரிமுத்துவின் தம்பி நமோ நாராயணன் அந்த கிரீடத்தை, தான் அடைய நினைக்கிறார். இந்நிலையில் மாரிமுத்துவின் மகள் இனியா, ஒரு சாமானியரான யோகிபாபு மீது காதல் கொள்கிறாள். அதற்கு எதிர்ப்பு வர யோகிபாபு கொல்லப்படுகிறார். அதேநேரம் அந்த கிரீடமும் காணாமல் போகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் தூக்குதுரை படத்தின் மீதி கதை.
கதைப்படி சில காட்சிகளிலேயே கொல்லப்பட்டுவிடுகிறார் யோகிபாபு. அதன்பின் அவரைப் பயன்படுத்த இயக்குநர் கடைபிடித்திருக்கும் உத்தி படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு போகிறது. அரசகுடும்பத்து வாரிசு என்பதற்கேற்ற வனப்புடன் இருக்கிறார் இனியா. அவருக்கும் திரைக்கதையில் குறைவான இடம்தான். ஆனால் வரும் காட்சிகளில் வரவேற்புப் பெறுகிறார்.
நான் கடவுள் இராசேந்திரன் தலைமையிலான மகேஷ், பாலசரவணன், செண்ட்ராயன் ஆகியோர்தான் படத்தைத் தொடங்கி வழி நடத்தி முடித்துவைக்கவும் செய்கிறார்கள். இவர்களில் புதுமுக நடிகர் மகேஷ் கதாபாத்திரத்துக்கேற்ற தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். நான்கடவுள் இராசேந்திரன், பாலசரவணன், செண்ட்ராயன் ஆகியோர் சிரிக்க வைப்பதற்கென்றே படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் மட்டும் சிரிப்பும், பல இடங்களில் கடுப்பும் வரவழைக்கிறார்கள்.
ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படப்பிடிப்பு நடத்த குறைவான இடங்களே அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் குறைவின்றிப் பணிபுரிய முனைந்திருக்கிறார். காதல்கதையாகத் தொடங்கி பேய்க்கதையாக மாறும் திரைக்கதைக்கு இசையால் பலம் சேர்க்க முயன்றிருக்கிறார் இசையமைப்பாளர் கே.எஸ்.மனோஜ்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் டெனிஸ் மஞ்சுநாத், ”உருவுகண்டு எள்ளாமை வேண்டும்” என்கிற கருத்தைச் சொல்வதற்கென கதையில், காதல், திருடர்கள் வாழ்வு, சகோதர மோதல் ஆகியனவற்றோடு ஒரு பேயையும் வைத்து திரைக்கதை எழுதியுள்ளார். அவர் எண்ணம் நல்லதுதான் அதைச் செயலாக்கிய விதம் நிறைவாக இல்லை.