தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து கமலின் 234வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். ‘தக் லைப்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், கமல்ஹாசனின் 233வது படத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளதாக ‘ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் கடந்த வருடம் அறிவித்தது. மேலும் இந்த படம் அரசியல் சம்பந்தமான கதைகளத்தில் உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படம் கைவிடப்பட்டதாக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம், அவர்கள் தயாரிக்கும் படங்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தது. அதில் ‘கமல்-233’ படத்தின் பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இதனால் இந்த படம் கைவிடப்பட்டதா என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போதுவரை வெளியாகவில்லை.