தென்காசி அருகே உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் கதிர் (ஆர்ஜே.பாலாஜி). அந்த ஊரில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சிறு பார்பர்ஷாப் நடத்துகிறவர் சாச்சா (லால்). இந்துக்கள் வீட்டு மொட்டை அடிக்கும் விழா என்றாலும், முஸ்லிம் வீட்டு சுன்னத் நிகழ்வு என்றாலும் அவர்தான் ஹீரோ. அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்படும் கதிருக்கு முடிதிருத்தும் தொழில் மீது அதீத ஆர்வம். அவரிடமே அந்த தொழிலை கற்றுக் கொள்ளவும் செய்கிறார். படித்து முடித்து விட்டு சிங்கப்பூர் சலூனை பெரிய அளவில் தொடங்க வேண்டும் என்பது அவர் கனவு. ஆனால் குடும்பம், சமூகம், அந்த தொழிலுக்கு இருக்கும் போட்டி எல்லாமே அவரை பின்னுக்குத் தள்ளுகிறது. அதை முறியடித்து அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
சவரத் தொழில், அதன் பின்னால் இருக்கும் தொழில்நுட்பம், அதன் கம்பீரம் என முதல் பாதி புத்தம் புதிய களத்தில் பயணித்து ஆச்சர்யப்படுத்துகிறது படம். ஆனால் பிற்பகுதியில் ஆச்சர்யம் மறைந்து சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. காரணம் சவரத் தொழிலில் சாதிக்க விரும்பும் கதிர் அந்த துறையிலேயே பயணித்து ஜெயித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நடனக்குழு ஒன்றுக்கு உதவி செய்து, அதன் மூலம் உயர்வது மாதிரியான கதை மாறுதல் இயக்குனரின் தடுமாற்றத்தையே காட்டுகிறது.
அதுவும் கிளைமாக்சில் அவரது சிங்கப்பூர் சலூனை இடிக்க விடாமல் கிளிகள் தடுப்பது மாதிரியான காட்சி அமைப்பு நம்பும்படியாக இல்லை, என்றாலும் விரும்புகிற தொழிலை செய்யாதல்தான் சாதிக்க முடியும் என்கிற மேசேஜை அழுத்தமாக பதித்த விதத்தில் சபாஷ் பெறுகிறார் இயக்குனர் கோகுல். விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் கவனம் பெறவில்லை. ஜாவித் ரியாசின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஏற்றுக் கொண்ட கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார் ஆர்ஜே.பாலாஜி. ‘குடும்பத் தொழில்தான் பெருசு என்றால் இன்ஜினியரிங் யார் குடும்ப தொழில்’ என்று ஆங்காங்கே தனது பன்ச் டயலாக் மூலமும் கவனம் ஈர்க்கிறார். பெரிய அளவில் தன்னம்பிக்கை கொண்ட அவர், ஒரு சமயத்தில் தற்கொலைக்கு முயற்சிப்பது என்பது ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை. அவருக்கு வரும் காதல்களும் கவனம் பெறவில்லை, என்றாலும் மீனாட்சி சவுத்ரியின் காதலும், திருமணமும் அழகு. அவரின் தந்தையாக வரும் சத்யராஜின் கருமித் தனம் சிரிக்க வைக்கிறது. அதுவும் பாரில் கடும் போதையில் 3 கோடி ரூபாய்க்கு செக் கொடுக்கும் அந்த காட்சி இன்னும் சில காலத்துக்கு ஓடும். ரோபோ சங்கரும் தன் பங்கிற்கு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். எப்படி இருந்தாலும் சிங்கப்பூர் சலூனுக்கு ஒரு முறை விசிட் அடிக்கலாம்.