சென்னையை அடுத்த அரக்கோணம் பகுதியில் ஊர் சார்பாக மேல் தட்டு சாதியினர் அங்கம் வகிக்கும் ஆல்ஃபா கிரிக்கெட் டீம் சாந்தனு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதே ஊரின் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் டீம் அசோக் செல்வன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் கேப்டனாக இருந்து அணியை வழி நடத்துகின்றனர். இந்த இரு அணியை சேர்ந்த நபர்களும் ஊரில் பார்க்கும் இடங்களில் எல்லாம் அவ்வப்போது விளையாட்டு ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் மோதிக் கொள்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, இவர்களுக்கு லீக் போட்டிகளில் விளையாடும் ப்ரொபஷனல் கிரிக்கெட் அணி உடன் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்கள்? இவர்கள் இரு அணிகளில் இருக்கும் பிரிவினை என்னவானது? என்பதே இப்படத்தின் மீதி கதை.
அந்த ஊரில் நிகழ்த்தப்படும் சாதிய ஒடுக்குமுறைகளும், அவை கிரிக்கெட் மைதானங்களில் பிரதிபலிப்பதையும் நேர்த்தியான திரைக்கதை மூலம் ஆழமான காட்சி அமைப்புகள் மூலம் காட்டியிருப்பது படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. குறிப்பாக 90களின் காலகட்டத்தில் வரும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளையும் முக்கிய பிளேயர்களின் விஷயங்களையும் ஆங்காங்கே பன்னீர் தெளிப்பது போல் தெளித்து கிரிக்கெட் தெரிந்த ரசிகர்களுக்கும், கிரிக்கெட் தெரியாத ரசிகர்களுக்கும் ரசிக்கும் படியான பல்வேறு காட்சிகளை பயன்படுத்தி படத்தை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஜெயக்குமார்.
காதல், ஆக்ரோஷம், குற்றவுணர்வு என நகரும் ஒரு கல்லூரி இளைஞனின் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை, கதாபாத்திரத்தின் தன்மையையறிந்து நேர்த்தியாக வழங்கியுள்ளார் அசோக் செல்வன். விளையாட்டு வீரராகவும் தேர்ந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். கதாநாயகனுக்கு இணையாகப் பயணமாகும் ஷாந்தனு பாக்யராஜும், தன் கதாபாத்திரத்தின் பொறுப்பை அறிந்து, அதற்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். சவாலான காட்சிகளைத் தனியாளாகச் சமாளித்திருக்கிறார். வழக்கமாகவே ஸ்போர்ட்ஸ் படங்களில் வரும் ‘மென்ட்டர்’ கதாபாத்திரம்தான் என்றாலும், அதன் கனத்தை உணர்ந்து நம் மனதில் நிற்கிறார் பக்ஸ் (எ) பகவதி பெருமாள். அசோக் செல்வனின் தம்பியாக பிரித்விராஜன், காமெடியும் காதலும் கலந்த கதாபாத்திரத்தில் பல இடங்களில் நம்மைச் சிரிக்க வைத்து கைதட்டலை பெறுகிறார். ஒரு துடுக்குத்தனமான காதலியாக வரும் கீர்த்தி பாண்டியன், அவர் பேசும் கிராமத்து தமிழில் மனம் கவர்கிறார். பொறுப்பான அம்மாவாக வந்து நம்மை ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கும் லிஸ்ஸி ஆண்டனி, பாசக்கார அப்பாவாக இளங்கோ குமரவேல் ஆகியோரின் நடிப்பும் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது.
அதேபோல விளையாட்டின் மேன்மையை உணர்த்தும் புல்லட் பாபுவாக வருபவர் சிறிய கேரக்டர் என்றாலும் கவனம் பெறுகிறார். அவரிடம், “இந்தியா டீமுக்கு ஏன் ஆடல” என கேட்கும்போது, “ஏன்னா அது இந்தியா டீம். எப்டியும் அங்க போனா கூட சேர்க்க மாட்டான். ஆயிரம் பாலிடீக்ஸ் இருக்கும். நான் வெஸ்ட் இன்டீஸுக்கு ஆடப்போறேன்” என போகிற போக்கில் அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது.
படத்தின் முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி முழுவதும் பெரும்பாலும் மைதானங்களில் படம் நகர்ந்தாலும் அதனுள் ரசிக்கும்படியான உணர்ச்சிப்பூர்வமான நட்பு, காதல், விளையாட்டு, போட்டி எனச் சிறப்பாக திரைக்கதையை உருவாக்கி, சின்ன சின்ன விஷயங்களைச் சேர்த்து அக்கதாபாத்திரங்களைத் தனித்துவமாகவும் ஆழமாகவும் மாற்றி திரைக்கதையை ரசிக்க வைக்கிறது எஸ்.ஜெயக்குமார், தமிழ் பிரபாவின் எழுத்துக் கூட்டணி.
முதற்பாதியிலிருந்து வரும் காதல் காட்சிகள், சரியான முடிவு இல்லாமல் அந்தரத்திலேயே முடிக்கப்படுகிறது. அதனால், காதல் தொடர்பான காட்சிகளும், பாடலும் இரண்டாம் பாதிக்கு வேகத்தடையாக மாறிவிடுகின்றன. மேலும், யூகிக்கக் கூடிய காட்சிகளைக் கொஞ்சம் இழுத்து, யூ-டர்ன் அடித்து மீண்டும் யூகித்தபடியே முடிக்கிறார்கள். கிரிக்கெட் போட்டியைக் காட்சிப்படுத்துவது என்றாலே கடைசி ஓவர், கடைசி பந்துவரை சுவாரஸ்யத்தைத் தக்கவைப்பது செயற்கையான சினிமாத்தனமே! பிரித்விராஜனின் காதல் காட்சிகள், லிஸ்ஸி ஆண்டனியின் பைபிள் மேற்கோள்கள் போன்றவைத் தொடக்கத்தில் ரசிக்க வைத்தாலும் அதன் பிறகு ரிப்பீட் மோடில் செல்வது சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. இப்படி சில குறைகள் இருப்பினும், இருவேறு பிரிவினருக்கும் பொதுவானதொரு பிரச்னை வரும்போது, ஒற்றுமையே அவசியம் என்ற `அரசியல் கருத்தை’ ஜனரஞ்சகமாக எடுத்துரைத்ததற்காக இந்த `ப்ளூ ஸ்டார்’ ரைசிங் ஸ்டாராக மேலே எழும்புகிறது.