உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை ஜன-22 , திங்கட்கிழமை பகல் 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து அயோத்திக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று புறப்பட்டார். ரஜினி செல்லும் அதே விமானத்தில் நடிகர் தனுஷும் லக்னோ வழியாக அயோத்திக்கு செல்கிறார். மேலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.